கண்ணீருடன் முற்றுகையிட்ட பெண்கள் மனு வாங்க கூட நேரம் இல்லை... அமைச்சர் சக்கரபாணி பிஸி.. பிஸி ..!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 61 லட்சம் மதிப்பில் 83 வண்டிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கிய நிலையில், வியாபாரிகள் அல்லாத கட்சியினருக்கு வண்டிகள் வழங்கப்பட்டதாக கூறி அமைச்சரை பெண்கள் முற்றுகையிட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 100 க்கும் மேற்பட்டோர் சாலை ஓரங்களில் பூக்கடை, பழக்ககடை மற்றும் உணவுக்கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 61 லட்சம் மதிப்பில் 83 வண்டிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து உள் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அமைச்சரை பெண் வியாபாரிகள் முற்றுகையிட்டனர்
ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திலிருந்து தாராபுரம் சாலை பிரிவு வரை 50 ஆண்டுகளாக சாலை ஓரத்தில் தள்ளுவண்டி கடைகள் நடத்தி வரும் பெண்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் முறைப்படி எங்களுக்கு வண்டிகள் வழங்கவில்லை என்றும் 18 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் நகராட்சி மூலம் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் புகார் தெரிவித்தனர்
யாசகம் கேட்பது போல கையேந்திய தாய்மார்களிடம் உங்களுடைய பெயரை எழுதிக் கொடுங்கள் வண்டி கொடுக்கச் சொல்லலாம் என்று கூறி அங்கிருந்து சென்றார்
இதனால் காலையிலிருந்து புகார் மனு அளிக்க காத்திருந்த சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு வண்டி கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் திரும்பி சென்றனர். மத்திய அரசு நிதியில் வழங்கப்படும் இத்திட்டத்தில் தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டது அம்பலமாகி உள்ளது
Comments