தி.மு.க. ஆட்சியில் 40 அணைகள் கட்டப்பட்டுள்ளன: அமைச்சர் துரைமுருகன் தகவல்
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 40க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் 12 அணைகள் கட்டியதாகவும், 6ஆவது முறையாக ஆட்சி செய்யும் தி.மு.க. 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளதாகவும் அண்ணாமலை பேசி இருப்பதாக துரைமுருகன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
அந்தத் தகவல் வடிகட்டிய பொய் என்றும், நம்பியாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் என 40க்கும் மேற்பட்ட அணைகள் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சி மீது குறை சொல்லும் முன், அது உண்மையா என்பதை ஒரு பரிசீலித்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், தி.மு.க வெறும் ஐந்து அணைகளை கட்டியுள்ளது என்று தாம் பேசி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து விளையாடும் துரைமுருகன், அவசரகதியில் இந்த சிறிய தகவலைச் சரிவர கவனிக்காமல் கோட்டை விட்டுவிட்டாரே என்று கூறியுள்ள அண்ணாமலை, தி.மு.க. கட்டியதாக துரைமுருகன் குறிப்பிட்டுள்ள அணைகளில் பல, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments