மகளிர் இட ஒதுக்கீடு - பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு விழா
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் மகளிர் அணி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக காலையிலேயே அலுவலகம் வந்த பா.ஜ.க. பெண் நிர்வாகிகள், நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரலாற்றின் சகாப்தம் தொடங்கிவிட்டதாகவும், பொற்காலத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
விழாவில் பங்கேற்க பா.ஜ.க. அலுவலகம் வந்த பிரதமர் மோடியை, மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர்க்கொத்துகள் வழங்கியும் வரவேற்றனர். அப்போது, காலில் விழுந்து ஆசி பெற முயன்ற வானதி சீனிவாசனுக்கு காலில் விழக்கூடாது என பிரதமர் அறிவுரை கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகளை கூறினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு பல தடைகள் இருந்ததாகவும், தடைகளை தாண்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேறியது சாதனை எனக் குறிப்பிட்ட பிரதமர், அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி கூறினார். பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி செய்துவரும் ஒரு நாடு எப்படி செயல்படும் என்பதற்கு மகளிர் மசோதா நிறைவேற்றமே சான்று என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Comments