நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

0 4915
நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் துரைப்பேட்டை வளாகத்தில் சாயக்கழிவு நீரை நிலத்தடியில் வெளியேற்றிய நான்கு ஆலைகளின் மின்இணைப்பை துண்டித்து சீல்வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் 2700 ஏக்கர் பரப்பளவில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 50க்கும் மேற்பட்ட சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் சில தொழிற்சாலைகள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி கழிவு நீரை நேரடியாக நிலத்தடியில் கலப்பதால் சுற்றுவட்டார கிணறுகள், வாய்க்கால்கள், நீர் நிலைகள் மாசடைந்து மக்கள் நீரை பயன்படுத்தும்போது பலவித நோய்களால் பாதிக்கப்படும் சூழலும் உருவாகின்றது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில் அவரது உத்தரவின் பேரில் மாசுகட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள், தொழிற்பேட்டை வளாகத்தில் மேற்கொண்ட ஆய்வில் ராஜன் என்பவரை தலைவராகவும், பிரேம் சந்தரை மேலாண் இயக்குனராகவும், ஜெய் சந்தரை இணை இயக்குனராகவும் கொண்ட அமர்ஜோதி ஸ்பின்னிங் மில்ஸ் டையிங் டிவிஷன் சாய ஆலை சிக்கியது.

வித்திய விநாயகா புராசஸ் நிறுவனமும் சாயக்கழிவை பூமிக்குள் வெளியேற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.

கதிரிஓவன்ஸ் என்ற என்ற டெக்ஸ்டைல் சாயத்தொழிற்சாலை மற்றும் சென்னை சிலிகேட் என்ற ரசாயன தொழிற்சாலை என மொத்தம் நான்கு தொழிற்சாலைகள் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை வளாகத்திலேயே நிலத்தடியில் வெளியேற்றியது உறுதி செய்யப்பட்டது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நான்கு தொழிற்சாலைகளின் மின்இணைப்பை துண்டித்து தொழிற்சாலைகளுக்கு சீல்வைக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் சாயக்கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments