போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு

0 3212
போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டில் இருந்து 4 செல்போன்களை திருடிச்சென்ற திருடர் ஒருவர், செல்போன் உரிமையாளரின் மனைவிக்கு போன் செய்து செல்போனை திருப்பித்தர பேரம் பேசி போலீசிடம் சிக்கி உள்ளார். கரும்பு தோட்டத்தில் பதுங்கிய திருடருக்கு நடந்த சிறப்பு கவனிப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

வீடு புகுந்து செல்போன்களை திருடிவிட்டு செல்போன் உரிமையாரிடம் பணம் கேட்டு கரும்பு தோட்டத்திற்கு அழைத்த திருடர் குல திலகம் இவர் தான்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தராசு கிராமத்தை சேர்ந்த ஏழைப்பெருமாள் என்ற விவசாயி வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த இரு செல்போன்கள் மாயமானது. அந்த செல்போனில் இருந்து அவரது மனைவியின் செல்போனுக்கு பேசிய மர்ம ஆசாமி ஒருவர், உங்கள் செல்போன் என்னிடம் தான் உள்ளது உங்கள் கணவரை பேசச்சொல்லுங்கள் என்று கூறி உள்ளார். ஏழைப்பெருமாள் தொடர்பு கொண்டு பேசிய போது உங்கள் செல்போனோடு சேர்த்து உங்கள் ஊரில் 4 செல்போன்களை திருடி வைத்துள்ளேன் புதிதாக செல்போன் வாங்க போன ஒரு போனுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் ஆகும், உங்களுக்காக 4 செல்போன் 15 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறேன் தனியாக வந்து வாங்கிட்டு போங்க, போலீஸ் கிட்ட போனா அவனுங்க என்னை விட திருட்டு பசங்க என்னை பிடித்து காசு வாங்கிட்டு வெளியே விட்டுருவாய்ங்க என்று கூறிய அந்த திருடர், வரும் போது அப்படியே ஓட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வந்துடுங்க என்று கூறியது தான் அந்த ஆடியோவின் ஹைலைட்..!

ஏற்கனவே ஒரு ஊரில் செல்போனை திருடிய போது வாங்க வந்தவர் நிறையபேரை கூட்டி வந்ததால் செல்போனை கொடுக்க வில்லை என்று தனது தொலை நோக்கு பார்வையை விவரித்தார் அந்த திருடர், தன்னிடம் பணம் இல்லை என்ற ஏழை பெருமாளிடம் நீ 10 ஆயிரம் ரூபாய் தந்தால் போதும், மற்ற 2 செல்போனுக்கு சொந்த காரங்ககிட்ட மீதிப்பணம் வாங்கிக் கொள்கிறேன், தனியாக கரும்பு தோட்டத்துக்கு வந்து செல்போன் லைட்டை உயர்த்தி காட்டுங்க உங்க செல்போனை உங்களுக்கு தருகிறேன் என்று டெக்னிக்கல் கோடுவேடு சொன்னார் அந்த திருடர் குல திலகம்.

திருடரின் ஆடியோவை போலீசாரிடம் ஒப்படைத்த ஏழைப்பெருமாள் செல்போன் திருட்டு குறித்து புகார் தெரிவித்த நிலையில் திருடர் சொன்ன கரும்பு தோட்டத்தை சுற்றி போலீசார் சாதாரண உடையில் பதுங்கி இருந்தனர். இருள் சூழ்ந்த நேரத்தில் செல்போன் லைட்டை உயர்த்தி காட்டியதும் , கருவாட்டை பார்த்த பெருஞ்சாளி போல வெளியே வந்த அந்த திருடரை மடக்கிப்பிடித்த போலீசார் சிறப்பாக கவனித்து அவரிடம் இருந்த செல்போன்களை கைப்பற்றினர்.

திருடிய செல்போனை கடையில் விற்றால் ஆயிரமோ ரெண்டாயிரமோதான் கிடைக்கும் ஆனால் செல்போனுக்கு சொந்தக்காரங்க கிட்டே பேரம் பேசி விற்றால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார் செல் திருடர் திண்டிவனம் அய்யனார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments