ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா...? கண்ணீரோடு விடை பெற்ற மீரா
திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்ஆண்டனி-பாத்திமா தம்பதியரின் மூத்த மகளான மீரா, தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்துக் கொண்டார். சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா, மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், அவரது ஆசிரியரோ, சக மாணவிகளோ, மீரா மன அழுத்தத்தில் இருந்ததை தாங்கள் பார்க்கவே இல்லையென தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், மனநல மருத்துவர்களிடம் மீராவே அப்பாயின்மென்ட் வாங்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உடற்கூராய்வுக்கு பிறகு உடல் ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மீராவின் பள்ளி ஆசிரியர்கள், தோழிகள் நேரில் வந்து கண்ணீரோடு அஞ்சலி செலுத்தி, அவருடனான நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட நிலையில், திரை நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர்.
நல்லடக்கம் செய்வதற்காக மீராவின் உடல் இன்று காலையில் அவரது வீட்டிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு நுங்கம்பாக்கம் அவிளா தெரசா தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மீராவின் புகைப்படத்தின் முன்பு உடல் வைக்கப்பட்டு 4 பாதிரியார்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கண்ணீர்மல்க மகளின் உடலை பார்த்தவாறே தரையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தார் விஜய் ஆண்டனி. மீரா உடலுக்கு புனித தண்ணீர் தெளித்து பாதிரியார்கள் ஆசிர்வதித்தனர்.
பிரார்த்தனையின் போது பேசிய தாயார் பாத்திமா, உன்னை சிறந்த நண்பராகவும், நல்ல லீடராகவும் பார்ப்பதாக உனது தோழிகள் சொல்கிறார்கள். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் எங்களிடம் சொல்லி இருக்கலாம், ஒரு நிமிடம் யோசிச்சுருக்கலாம் என கண்ணீரோடு கூறினார்.
உன்னை என் கருவில் சுமந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த ஜென்மத்தில் நீ தனியாக பிரிந்து சென்றாலும், அடுத்த ஜென்மத்தில் நாம் சேர்ந்து வாழ்வோம் எனவும் கண்ணீரோடு பாத்திமா கூறினார்.
சிறப்பு பிரார்த்தனையைத் தொடர்ந்து இறுதி ஊர்வல வாகனம் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்திற்குச் சென்றது. அங்கு, இறுதி சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மீராவிற்கு எப்போதும் தயிர் சாதம் தான் பிடிக்கும், அதனை அவர் விரும்பி சாப்பிடுவார் என விஜய்ஆண்டனி வீட்டு சமையல் பெண் சந்திரா தெரிவித்துள்ளார். அவர் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டதும் நான் மயக்கமடைந்து விட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
படிப்பு, விளையாட்டு, சமூக செயல்பாடு என பலவற்றிலும் திறனை வெளிப்படுத்திய ஒரு குழந்தையின் இழப்பு குடும்பத்தினருக்கு மிகுந்த இழப்பையும், நண்பர்களுக்கு மன வேதனையையும் அளித்துள்ளது.
Comments