'ராஜீவ் காந்தியின் கனவு மசோதா'... மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து சோனியா காந்தி
மகளிர் இட ஒதுக்கீட்டில் அனைத்து பிரிவினரும் பயனடையும் வகையில் உள் ஒதுக்கீடு வழங்க, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், இது தனது கணவர் ராஜீவ் காந்தியின் கனவு மசோதா என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை ராஜீவ் காந்தியே முதலில் கொண்டு வந்ததாகவும், அப்போது அது மாநிலங்களவையில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டதாகவும், பின்னர் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் நிறைவேற்றப்பட்டதாகவும் சோனியா கூறினார்.
அதன் விளைவாக, உள்ளாட்சி அமைப்புகள் மூலம், நாடு முழுவதும் தற்போது 15 லட்சம் பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரிப்பதாகவும், அதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் சோனியா கூறினார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவு பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தினார்.
Comments