விஜய் ஆண்டனி மகளின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன..? வெளியான முரண்பட்ட தகவல்கள்!
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த ஓராண்டாக மன அழுத்தத்துக்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன் மனநல மருத்துவர்கள் இருவருக்கு சந்திக்க நேரம் கேட்டு மீரா வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சென்னை சர்ச்பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மீரா தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மீராவின் வீட்டிற்கு வந்திருந்த சர்ச் பார்க் பள்ளியின் முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். மீராவிற்கு பள்ளியில் ஏதும் பிரச்னை ஏற்பட்டிருந்ததா? பள்ளி வகுப்பில் சகஜமாக இருந்தாரா? என கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஒராண்டு காலமாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மன அழுத்தத்திற்காக காவேரி மருத்துவமனையில் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மீராவுக்கு மன அழுத்தம் எதுவும் இல்லை என்று அவரது ஆசிரியர்களும் நெருங்கிய தோழியும் கூறியுள்ளனர்.
இதனிடையே விஜய் ஆண்டனி மகள் இரண்டு நாட்கள் கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது செல்போனில் இரண்டு மனநல மருத்துவர்களிடம் பேசிய வாட்ஸ்அப் சாட் மூலம் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. மீராவின் செல்போனைக் கைப்பற்றிய தேனாம் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த ஞாயிறன்று டாக்டர் சுஜாதா, டாக்டர் கீர்த்தி ஆகிய இரு மனநல மருத்துவர்களுக்கு மீரா தனது செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அப்போது தனது சிகிச்சைக்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு சாட் செய்துள்ளார் மீரா. அதில் ஒரு மருத்துவர் 24-ம் தேதியும், மற்றொரு மருத்துவர் 29-ம் தேதியும் நேரம் கொடுத்துள்ளனர். இருவரிடமும் அதற்கு முன்னதாகவே சந்திக்க முடியுமா டாக்டர் எனக்கேட்டு மீரா பதில் அனுப்பியுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சில மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு மனநல மருத்துவர்களும் மீராவின் சிகிச்சைக்காக அவரை சந்திக்க நேரம் ஒதுக்கியும், அதற்கு முன்பாகவே சந்திக்க வேண்டும் என கேட்டு கடும் மன அழுத்தத்தில் மீரா இருந்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments