வினை தீர்ப்பான் விநாயகர்..! விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்..!

0 2734

முழுமுதலோன் விநாயகர் பெருமானின் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுண்டல் கொழுக்கட்டை, மலர்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடும் மக்கள், இனி நடக்கப்போகும் நாட்கள் நல்லதாக நடக்க வினை தீர்க்கும் விநாயகரை வேண்டி கொள்கின்றனர்.

 

ஆனை முகக்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தியாகும். விநாயகர் ஓம்காரம் என பிரணவ மந்திரத்தின் வடிவமானவர் என்பதே அவரது உருவத்தத்துவமாகும்.

வரிசையாக அடுத்தடுத்த மாதங்களில் வர உள்ள இந்துக்களின் விசேஷ நாட்களுக்கும் பண்டிகைகளுக்கும் பிள்ளையார் சுழி புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது.

குழந்தை உடலில் யானையின் தலையுடன் காட்சியளிக்கும் விசித்திரமான தெய்வம் விநாயகர். வினை தீர்க்கும் விநாயகரை வணங்கினால் அனைத்திலும் வெற்றி என்பது ஐதீகம். பயணத்தில் வழித்துணைக்கும் விநாயகர். வணிகர்கள் புதிய கணக்குத் தொடங்கவும் விநாயகர் , திருமணம் நடக்க விநாயகர் வினைகள் தீர்க்கும் விநாயகர் கடன் தீர்க்கும் விநாயகர் , சனிபகவான் அருள் பெற விநாயகர் என்று எண்ணற்ற காரியங்களுக்கு விநாயகரை முழு முதல் தெய்வமாக வணங்குகின்றனர் பக்தர்கள்...

முருகப்பெருமான் மாங்கனிக்காக உலகை சுற்றி வந்த போது தாய் தந்தையே உலகம் என்று ஈசனையும் உமையையும் சுற்றி வந்து மாங்கனியைப் பெற்ற விநாயகரின் குறும்பும் புகழும் உலகறிந்தது.

வட மாநிலங்களில் குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் காக்கும் கடவுளாக உள்ள விநாயகரின் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலைகள் 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது. பிள்ளையார்ப்பட்டி, திருச்சி மலைக்கோட்டை, புதுச்சேரி மணக்குள விநாயகர் உள்ளிட்ட விநாயகர் ஆலயங்களிலும் புகழ்மிக்க சைவ ஆலயங்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் ஆரத்திகள் நடைபெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments