குள்ள சிவா என்கவுண்டர்.. போலீசார் பேசியது என்ன..? வெளியானது பகீர் வீடியோ..!

0 2988

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ரவுடி ‘குள்ள’ விஸ்வா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், 20 நாட்களுக்கு முன்பாக காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த விஸ்வாவை சுட்டுக் கொன்று விடுவதாக சப்இன்ஸ்பெக்டர் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குள்ள விஸ்வா என்கிற விஸ்வநாதன் . 34 வயதான சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, நாட்டு வெடிகுண்டு வீச்சு, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு 21 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கையெழுத்திட்டு வந்த விஸ்வா, கடந்த சில வாரங்களாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தனது மனைவியை அபகரித்து வைத்துக்கொண்டு விஸ்வா கொலை மிரட்டல் விடுப்பதாக பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் குள்ள விஸ்வாவை ஏடிஎஸ்பி. வெள்ளத்துரை தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி அடுத்த பகுதியில் உள்ள மாந்தோப்பில் விஷ்வா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குள்ள விஸ்வாவை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றதாகவும், விஸ்வா மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓட முயன்றபோது தனிப்படை போலீசார் தற்காப்புக்காக தூப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்து விஸ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

விஸ்வா தாக்கியதில் காயம் அடைந்ததாக தலைமை காவலர்களான ராஜேஷ்,வாசு ஆகியோர் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். என்கவுண்டர் செய்த ரவுடி விஸ்வாவின் உடலை போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்துக்கு 20 நாட்களுக்கு முன்பாக வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜரான ரவுடி குள்ள விஸ்வாவை சுட்டு விடவா ? என்று சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆவேசமாக பேசுவது போன்ற வீடியோ ஒன்று அவரது வழக்கறிஞர்களால் வெளியிடப்பட்டது.

ரவுடி தாக்கியதில் காயம் பட்ட போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக சட்டம் ஒழுங்கு காவல் ஏடிஜிபி அருணிடம், ரவுடி விஸ்வாவை என்கவுண்டர் செய்வதாக போலீசார் முன்கூட்டியே மிரட்டியதாக வெளியான வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த வீடியோ குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments