விலைவாசியைக் கட்டுப்படுத்த அரிசி, கோதுமை மூட்டைகளை வெளிச்சந்தைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு
பண்டிகைக் காலங்கள் நெருங்கும் நிலையில் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க மேலும் கோதுமை மூட்டைகளை அரசுக் கிடங்கில் இருந்து வெளிச்சந்தைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா , கடந்த நான்கு மாதங்களில் கோதுமை விலை 11 சதவீதம் உயர்ந்துள்ளதால் மத்திய அரசு உணவு தானியங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
5 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமையும் இரண்டரை மில்லியன் மெட்ரிக் டன் அரிசியும் வெளிச்சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
அரசுக்கிடங்கில் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார். இதனிடையே வெளிநாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யும் வகையில் கோதுமை இறக்குமதி மீதான 40 சதவீத வரியைக் குறைக்கும்படி வியாபாரிகள் கோரியுள்ளனர்.
Comments