முருங்கை மவுசு அவ்வளவுதானா ? கோயம்பேட்டில் கிலோ 35 ரூபாய் வயல்காட்டில் 3 ரூபாய் தானாம்..! டிராக்டரால் முருங்கையை அழித்த விவசாயி

0 2033

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்ட முருங்கைக்காய்களுக்கு போதிய விலை இல்லாததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர் 5 டன் முருங்கைக்காய்களுடன் முருங்கை மரங்களை டிராக்டர் கொண்டு அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ராப்பகல் கண்விழித்து ... பக்குவம் பார்த்து தண்ணீர் விட்டு வளர்த்த முருங்கை தோட்டத்தை... டன் கணக்கில் காய், பிஞ்சு பூக்களுடன் டிராக்டர் கொண்டு அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் முருங்கை விவசாயிகள்..!

அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் , ஜெயங்கொண்டம் பகுதிகளில் விவசாயிகள் முருங்கையை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்திருந்தார்.

கூலி ஆட்களை கொண்டு பறிக்கப்பட்ட முருங்கைக்காயை மூட்டைகளாக கட்டி விற்பனைக்காக கும்பகோணம் சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார் விவசாயி குமார். . பறிக்கப்பட்ட முருங்கைக்காயை சந்தைக்கு கொண்டு சென்ற விவசாயி குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சந்தையில் 2 ரூபாய் 3 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காயை கூட விவசாயிகளிடம் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது. இதனால் முருங்கை மூட்டைகளை சாலையோரம் குப்பை போல கொட்டிச்சென்றார்

ஒரு கட்டத்தில் முருங்கை வயலுக்கு வந்து பறிக்கும் கூலிச் செலவுக்கு கூட முருங்கைக்காய் விற்பனையாகவில்லையே என விரக்தியில் பூவும் பிஞ்சுமாய் , காய்களுமாக இருந்த முருங்கை தோட்டத்தை டிராக்டர் முழுவதுமாக அழித்து உழவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்

தற்போது இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய்க்கு கூட சந்தையில் வாங்குவதற்கு ஆள் இல்லை , இந்த வயலில் 5 டன் அளவிற்கு முருங்கைக்காய் மரத்தில் உள்ளது வேறு வழி இல்லாததால் இதனை தற்போது அழித்து வருவதாக கையெடுத்து கும்பிட்டு வேதனையோடு தெரிவித்தார் குமார்

விலையில்லை என்று விவசாயி முருங்கை தோட்டத்தை அழித்துள்ள நிலையில், சென்னை கோயம் பேட்டில் ஒருகிலோ முருங்கைக்காய் 35 ரூபாய்க்கும் சில்லரைகடைகளில் 50 ரூபாய் வரையும் விலை வைத்து முருங்கைக்காய்கள் விற்கப்படுவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments