சுயமரியாதை திருமணத்தில் வரதட்சணை கொடுமை உயிரை மாய்த்த புதுப்பெண்..! காரும்.. 50 சவரனும் வேணுமாம்...!

0 5221

சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்ட 12 நாட்களிலேயே வரதட்சணைக் கேட்டு மனைவியை வீட்டை விட்டு விரட்டி விட்டு வேறொரு திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்ட இந்த இளம்பெண்ணின் வாழ்க்கை வரதட்சனை கொடுமையால் முடிவுக்கு வந்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட காட்சிகள் தான் இவை..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த குமாரர் என்பவரின் மகள் ராஜேஸ்வரி. ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு ஆவடியில் நகைக் கடையில் வேலைப்பார்த்து வந்த ராஜேஸ்வரிக்கு, மின்சார ரயில் பயணத்தின் போது மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்ற தீபன் அறிமுகமானார் . இவர்களது பழக்கம் காதலாக மாற இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும், கடந்த மார்ச் 23ம் தேதியன்று சென்னையில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் மாலை மாற்றி சுயமரியாதை பதிவு திருமணம் செய்துக் கொண்டனர். ஆசையாய் திருமண வாழக்கையை தொடங்க காதலன் வீட்டுக்கு சென்ற புதுப்பெண் ராஜேஸ்வரி, திருமணம் முடிந்த 12 வது நாளிலேயே கண்ணீரும் கம்பலையுமாக வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகின்றது

பதறித் துடித்து விசாரித்த தாய் மகாலட்சுமியிடம், சுயமரியாதை திருமணம் என்று சொல்லி விட்டு இப்போது, 50 சவரன் நகையும், சீர்வரிசை பொருட்களும் வேண்டுமென மாமனார், மாமியார் கேட்பதாக கூறி அழுதார் ராஜேஸ்வரி. இதனை உன் கணவரிடம் கூறினாயா...? என்று தாய் மகாலட்சுமி கேட்க, சீர்வரிசையாக தனக்கு கார் வாங்கித் தர வேண்டுமென கணவர் தீபன் கேட்பதாக வேதனை தெரிவித்தார் ராஜேஸ்வரி.
அவர்கள் கேட்ட வரதட்சனை கொடுக்க வழியின்றி ராஜேஸ்வரி பெற்றோர் வீட்டில் தங்கி விட, மாப்பிள்ளையிடம் பெண் வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததோடு, பதிவு செய்த திருமணத்தை முறைப்படி நடத்தலாம் எனவும் கூறி வந்துள்ளனர்.

செல்போனில் அவ்வப்போது பேசி வந்த தீபனும் பைசா தேறாது என்று தெரியவந்ததால், குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு ராஜேஸ்வரியின் செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டதாகவும், ஸ்டீபனுக்கு வேறொரு பெண்ணுடன் தடபுடலாக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் அவரது பெற்றோர் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்ததும் மனமுடைந்த ராஜேஸ்வரி புதன்கிழமையன்று வீட்டில் தூக்கிட்டு மாய்த்துக் கொண்டதாக ராஜேஸ்வரியின் தாயார் மகாலட்சுமி அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஸ்டீபன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய பிறகு, உடற்கூராய்விற்காக சடலத்தை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுவரை சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரைக் கூட போலீசார் கைது செய்யப்படவில்லையெனக் கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போலீசாரின் உறுதிமொழியை ஏற்று மறியலை கைவிட்டனர்.ஆணும் பெண்ணும் சமம் யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பதை உணர்த்துவதாக கூறப்படும் சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணின் திருமணவாழ்க்கை 12 நாட்களிலேயே முறிந்த நிலையில் அந்தப்பெண் வாழக்கையை முடித்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments