இதற்கெல்லாமா ஆள் பிடிப்பாய்ங்க... அமலாக்கத்துறை சோதனைக்கு நன்றி தெரிவித்த ரத்தினம் மகன்..! இப்படி ஒரு கூட்டம் இருக்கும் வரை....
திண்டுக்கல்லில் தொழில் அதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்ற நிலையில், அவரது ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டதாக கூறப்படும் பெண்கள், சினிமா பாணியில் தாங்கள் ரத்தினத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறியதோடு கைதட்டி ஆரவாரம் செய்து விட்டு கலைந்து சென்றனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கு கையெடுத்து கும்பிட்டபடி வாக்கு சேகரிக்கிறார்... என்று நினைத்து விடாதீர்கள். கடந்த 2 நாட்களாக தங்கள் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்ற நிலையில் வெளியில் வந்த திண்டுக்கல் ரத்தினத்தின் மகன் வெங்கடேசன், காத்திருந்த பெண்களுக்கு நன்றி தெரிவித்த காட்சிகள் தான் இவை..!
கடந்த 2016 ஆண்டு பண மதிப்பிழப்பின் போது பல கோடிகளை ஒரே நாளில் மாற்றியதாக பெட்டி பெட்டியாக 2000 ரூபாய் நோட்டுக்களுடன் வருமானவரித்துறையினரால் கைது செய்யப்பட்டவர் ரத்தினம்..!
சர்வேயராக அரசு பணியில் சேர்ந்து, ரியல் எஸ்டேட் வணிகத்தில் நுழைந்து, செங்கல் சூளை, கல்குவாரி, ஓட்டல், கல்வி நிறுவனங்கள் என 20 க்கும் மேற்பட்ட தொழில்களை திண்டுக்கல் ரத்தினம் நடத்தி, வருவதாக கூறப்படுகிறது..! திண்டுக்கல் ஜி.டி.என் நகர் பங்களாவில் இரு மகன்களின் குடும்பங்களுடன் வசித்து வருகிறார், ரத்தினம். இவரது இளையமகன் வெங்கடேசன், மாநகராட்சி திமுக கவுன்சிலராக உள்ளார்.
மணல் வியாபாரம் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் அரசியலில் திமுக, அதிமுக என அனைத்து தரப்பிலும் ரத்தினத்துக்கு ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். எந்திர துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சோதனை அரங்கேறியது. அப்போது 2 எடை எந்திரங்களை கொண்டு வந்து ரத்தினத்தின் வீட்டில் உள்ள தங்க நகைகளை எடை போடப்பட்டதாகவும், ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. சோதனை நிறைவடைந்ததையடுத்து அதிகாரிகள் வெளியே செல்ல தயாரான போது. அவரது ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்ட பெண்கள் வாசலில் கையில் விசிறிகளுடன் காத்திருந்தனர்.
செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் வருமான வரி சோதனைக்கு சென்ற அதிகாரிகளுடன் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதை போல எங்கே எல்லை மீறி விடுவார்களோ? என்று முன் கூட்டியே உஷாரான ரத்தினத்தின் மகனும் கவுன்சிலருமான் வெங்கடேசன், வெளியில் சென்று வாகனங்களுக்கு சின்சியராக வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
வாசலில் வழிவிடாமல் அடைத்து நின்றவர்களை விலகி நிற்கவும் கேட்டுக் கொண்டார்
அமலாக்கத்துறையினரின் வாகனங்கள் ஒவ்வொன்றாக வெளியே சென்ற பின்னர், அவரை காண பெண்கள் 2 நாட்களாக காத்திருப்பதாக கூறி வெங்கடேசனை மீண்டும் வெளியே அழைத்து வந்தனர் ஆதரவாளர்கள் சிலர். அந்தப் பெண்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு ஒண்ணும் பிரச்சனை இல்லை பத்திரமாக கிளம்புங்க என்று வெங்கடேசன் சொல்ல, அவர்களோ தங்களை கூட்டி வந்தவர்களின் முகத்தை பார்த்தபடி நின்றனர்.
அருகில் நின்ற ஒருவர் உங்களுக்கு ஆதரவாக இரும்போமுன்னு சொல்லுங்க என்றார். அதனை தொடர்ந்து அந்த பெண்களும் ஆதரவாக இருப்போம் என கோஷமிட்டனர்
மற்றொரு ஆதரவாளர் நாங்க இருக்கோம் என்று சொல்லுங்க என்றதும், நாங்க இருக்கோம் என்று கூறிவிட்டு பெண்கள் அனைவரும் கைதட்டினர்.
அதன் பிறகும் கலைந்து செல்லாமல் நின்ற பெண்களிடம் நாளைக்கு பார்க்கலாம் கிளம்புங்க என்று ஆதரவாளர்கள் கூறிய பின் தயக்கத்துடன் கலைந்து சென்றனர்.
வருகின்ற எம்.பி தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை குறிவைத்து ரத்தினம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்ப்ட்டிருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.
Comments