முன்னாள் எம்.எல்.ஏ சத்யாக்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை வடபழனியில் உள்ள சத்யாவின் வீட்டிலும் அவருக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னையில் உள்ள மேலும் 15 இடங்களிலும் கோவை மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
வடபழனியில் சோதனை நடைபெறும் சத்யாவின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அ.தி.மு.கவினர் சென்றனர். உள்ளே அனுமதிக்கப்படாததால் அவர்கள் வாயிலில் காத்திருந்தனர்.
சத்யாவுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படும் அ.தி.மு.க நிர்வாகியான ராஜேஷின் தண்டையார்பேட்டை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
2016ம் ஆண்டில் தியாகராய நகர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏவாக சத்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திரத்தில் தெரிவித்த சொத்து மதிப்பையும், 2021ம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து மதிப்பையும் ஆய்வு செய்ததில் இரண்டரை கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளனர்.
Comments