விஷாலை விளாசிய நீதிபதி.. எதிர்காலத்தில் நடிக்க தடை.. கோபத்திற்கு என்ன காரணம்..? எப்போதுமே ஏமாற்றினால் இப்படித்தான்..!

0 5823
விஷாலை விளாசிய நீதிபதி.. எதிர்காலத்தில் நடிக்க தடை.. கோபத்திற்கு என்ன காரணம்..? எப்போதுமே ஏமாற்றினால் இப்படித்தான்..!

லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனை விஷால் கொடுக்க மறுத்ததால், மார்க் ஆண்டனி படத்திற்கு  தடை விதிக்கப்பட்ட நிலையில் , சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய நடிகர் விஷாலை கேள்விகளால் விளாசிய நீதிபதி, பணத்தை செலுத்த வில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களையும் எதிர் காலத்தில் வெளியிட தடை விதிக்கலாமா? என்றதால் அதிர்ச்சி அடைந்தார்.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனான 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, பணம் செலுத்தியது. அந்த தொகையை முழுமையாக திருப்பி செலுத்தும் வரை, விஷால் தனது பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் , லைகா நிறுவனத்துக்கு மட்டுமே வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வீரமே வாகை சூடும் என்ற படத்தை நேரடியாக வெளியிட்டதால், விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைக்காவுக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது. அதனை நிறைவேற்றாததால், நீதிமன்றம் நடிகர் விஷாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன் படி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது, கடந்த முறை தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த விஷால் அதே நாளில் ஒரு கோடி ரூபாயை மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோவிடம் இருந்து பெற்றுள்ளதாக கூறிய நீதிபதி இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பது என்று விஷால் மீது அதிருப்தி தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி 15 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால் விஷால் படங்களை வெளியிட தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஷால், லைகாவுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மட்டும் ஏன் கொடுக்கவில்லை என்றும் உத்தரவாதம் அளித்து விட்டு அதை செயல்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் மினி ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வங்கிக் கணக்கு விவரங்களில் 1 கோடியே 61 லட்ச ரூபாய் விஷால் வங்கிக் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், அந்த தொகையில் இருந்து 90 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி. வரியாக செலுத்தப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவு ஏதும் மீறப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தான் நடிக்கும் படங்களுக்கு 40 கோடி ஊதியம் பெற்றுள்ள விஷால், பணத்தை செலுத்தாவிட்டால் நடிப்பதை நிறுத்த வேண்டும் என லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன ? சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என விஷாலை எச்சரித்தார்.

மேலும் பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களுக்கும் எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கிடையே மினி ஸ்டூடியோவின் மார்க் ஆண்டனி படத் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் அந்தப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி படத்தை வெளியிட அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments