டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டியா..? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
டெல்லியில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் 63வது மாநாட்டில் பேசிய அமைச்சர் கட்கரி, நாட்டில் 52 சதவீதமாக இருந்த டீசல் வாகனங்களின் பயன்பாடு 2014-ம் ஆண்டுக்கு பிறகு 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எரிபொருளான டீசலை பயன்படுத்தம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார். டீசல் வாகனங்களின் உற்பத்தியை குறைக்காவிட்டால் அவற்றின்மீது கூடுதல் ஜி.எஸ்.டி. விதிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
கட்கரியின் இந்த பேச்சை அடுத்து டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்க அரசு பிரிசீலிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் தெளிவுபடுத்திய கட்கரி, 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வு என்ற நிலையை எட்ட, டீசல் போன்ற எரிபொருட்களுக்கு பதிலாக பசுமை எரிபொட்களுக்கு மாறுவது அவசியம் என கூறியுள்ளார்.
அந்த எரிபொருள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும், மாசு ஏற்படுத்தாத வகையிலும், குறைவான விலையிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments