முதல் 3 ஆண்டுகளில் சனாதன ஒழிப்புப் பேச்சு..! கடைசி 2 ஆண்டுகளில் ஹிந்து ஆதரவு காட்சி..! அண்ணாமலையின் அதிரடி 'அட்டாக்'..!!

0 2415

ஆட்சிக்கு வந்த முதல் மூன்று ஆண்டுகளில் சனாதனத்துக்கு எதிராக பேசும் தி.மு.க. கடைசி 2 ஆண்டுகளில் தங்கள் கட்சியில் 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள் என்று கூறுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் த.மு.எ.ச. மாநாட்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசிய போது அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்த சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் முதலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அண்ணாமலை, சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய மேடையில் சேகர்பாபு அமைதியாக அமர்ந்திருந்ததாக கண்டனம் தெரிவித்தார்.

மதங்கள் வருவதற்கு முன்பே சனாதனம் இருந்து வருவதாகவும் ஆதி காலத்தில் இருந்தவர்கள் சனாதனத்தை மட்டுமே பின்பற்றியவர்கள் என்றும் குறிப்பிட்ட அண்ணாமலை, பெரியார் பிறந்த போது கூடவே சனாதனம் பிறந்தது போல தி.மு.க.வினர் பேசுவதாக தெரிவித்தார். உடன்கட்டை ஏறுதல், கைம்பெண் மறுமணம், குழந்தைத் திருமணம் போன்றவற்றில் சீர்திருத்தங்களை செய்தவர்கள் சனாதனிகள் தான் என்றும் அவர் கூறினார்.

தி.மு.க. வந்த பிறகு தான் தமிழகத்தில் ஜாதி அரசியல் வந்தது என்று தெரிவித்த அண்ணாமலை, தென் தமிழகத்தில் 30 நாட்களில் 23 கொலைகள் அரங்கேறியுள்ளன என்றார்.

சனாதனம் பற்றி தவறாக பேசுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், ஆட்சியில் இருப்பதால் சனாதனத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தக் கூடாது என்றார். ஆட்சிக்கு வந்த முதல் மூன்று ஆண்டுகளில் சனாதனத்துக்கு எதிராக பேசும் தி.மு.க. கடைசி 2 ஆண்டுகளில் தங்கள் கட்சியில் 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள் என்று கூறுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினர் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக சென்றனர். அறநிலையத்துறை அலுவலகத்திற்கு அருகே போலீசார் தடுத்ததால் அண்ணாமலை உள்ளிட்டோர் சாலையின் நடுவே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அண்ணாமலை உள்ளிட்டோர் கலைந்து சென்றனர்.

பா.ஜ.க. போராட்டத்தால் நுங்கம்பாக்கம் பகுதியில் மாலை 3 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் நிறைவடைந்த பின் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments