காலை உணவு தயார் மாணவர்கள் சாப்பிட மறுக்கும் பின்னணி என்ன ? இங்கேயும் சாதி தான் பிரச்சனையா ?

0 12779

தூத்துக்குடி மாவட்டம் சிறுமலைக்குன்று அடுத்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு சாப்பிட மாணவர்களை பெற்றோர் அனுமதிக்க மறுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்..

காலை உணவுத்திட்டம்.. யார் கேட்டா ? என்று கேள்வி எழுப்பிய பெற்றோரிடம், அரசாங்கம் கொண்டு வந்திருக்கு சாப்பிட்டுத்தான் ஆகனும் என்று கட்டாயப்படுத்தி கண்களில் நீர் வழிய மாணவிகளை அமரவைத்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடங்கப்பள்ளியில் அரங்கேறி உள்ளது

இந்த பள்ளியில் மாணவர்கள் 3 பேரும், மாணவியர் 8 பேரும் என மொத்தம் 11 பேர் மட்டுமே பயின்று வரும் நிலையில் , காலை உணவு திட்டத்துக்கு முனிய செல்வி என்ற சமையலரும், மதிய உணவு திட்டத்துக்கு தனி சமையலர் , தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் என 4 பேர் பணியில் உள்ளனர். கடந்த 25 ந்தேதி முதல் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 11 பேரில் முனிய செல்வியின் உறவுக்கார குழந்தைகள் இருவர் மட்டுமே காலை உணவை சாப்பிடுவதாகவும், மற்ற மாணவ மாணவியரின் பெற்றோர் காலை உணவு சாப்பிடக்கூடாது என்று சொல்லி அனுப்பி விடுவதால் அவர்களுக்கு சமைக்கப்படும் காலை மிச்சமாவதாகவும், தன்னை சாதி ரீதியாக பிரித்து பார்ப்பதாகவும் முனியசெல்வி புகார் தெரிவித்தார்

இரவு நேரத்தில் அனுமதியின்றி , ஊருக்குள் ஒலிபெருக்கி வைத்தது தொடர்பாக தனது கணவர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததும் தன் மீது பாரபட்சம் காட்ட ஒரு காரணம் என்று முனிய செல்வி தெரிவித்தார்.

இதையடுத்து கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்கு சென்று அங்கு உள்ள மாணவ மாணவிகளிடமும் , பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காலை உணவு திட்டத்துக்கு சமையலராக உள்ள முனிய செல்வியின் கணவருக்கும் ஊராருக்கும் ஏற்கனவே பிரச்சனை உள்ளதாகவும், இதன் காரணமாகவே முனிய செல்வியின் சமையலை சாப்பிட தங்கள் குழந்தைகளை அனுமதிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து வேறு ஒரு சமையலரை பணிக்கு அமர்த்துவதாக உறுதி அளித்த அதிகாரிகள் , ஆளை மாற்றிய பின்னர் இதே போல பிரச்சனை செய்யக்கூடாது அனைவரையும் காலை உணவு சாப்பிட வைக்க வேண்டும் என்று எச்சரித்தனர்

போலீஸ் விசாரணைக்கு பின்னர் மாணவ மாணவிகள் அச்சத்தில் கதறி அழுதபடி பெற்றோருடன் சென்றனர்

இதற்கிடையே எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் கீதா ஜீவனிடம் இந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் நேரடியாக அந்த பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கீதாஜீவன், தனிப்பட்ட இருவருக்கு இடையேயான பிரச்சனையே தவிர வேறு எந்த விவகாரமும் இல்லை, காலை உணவுத்திட்டம் சிறப்பாக தொடரும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments