பள்ளியில் காலை உணவுத் திட்ட உணவை சாப்பிட மறுக்கும் மாணவர்கள் சமையலர் பட்டியலினத்தவர் எனக் குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட உணவை குழந்தைகள் சிலர் சாப்பிட மறுத்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
உசிலம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அப்பள்ளியில் சமையலராக பணிபுரியும் முனிய செல்வி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் சமைத்த உணவை 2 குழந்தைகளை தவிர மற்றவர்கள் சாப்பிட மறுப்பதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அமைச்சர் கீதா ஜீவன் பள்ளியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
முனிய செல்வியுடனான தனிப்பட்ட பிரச்சனையிலேயே மாணவர்கள் சாப்பிட மறுக்கின்றனர் என்றும் பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
20 நாட்களுக்கு முன் அவ்வூரில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் முனிய செல்வியின் கணவர் மாணவர்களின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அதன் காரணமாகவே தங்களது பிள்ளைகள் உணவு சாப்பிட அவர்கள் மறுப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
Comments