மறக்குமா நெஞ்சம்....மறக்கவே மாட்டோம்.. ஏஆர் ரகுமான் இசைநிகழ்ச்சியால் வெறுத்துப்போன ரசிகர்கள்.. !!
சென்னை பனையூரில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமானின் இசைக் கச்சேரியைக் காணச் சென்றவர்கள் அங்கு நடந்த குளறுபடிகளால் மனம் நொந்து திரும்பும் நிலைக்கு ஆளானார்கள். 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களும் உள்ளே செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்திருந்து வெறுத்துப் போய் வீடு திரும்பியுள்ளனர். மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரியை வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் என்று விரக்தியுடன் கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடைபெற இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" இசைக் கச்சேரி, மழையின் காரணமாக நேற்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இசைக்கச்சேரியை காணும் ஆவலில் நேற்று மதியம் முதலே ரசிகர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை நோக்கி படையெடுத்ததால் இ சி ஆர் சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
26 ஏக்கர் பரப்பளவில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை நிற்க இடம் உள்ளது என சொல்லப்பட்ட நிலையில் 30 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளே நிற்க முடியும் என்றும், ஆனால் அதை விட அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகர்கள் தெரிவித்தனர்.
அரங்கத்தின் உள்ளே விஐபி / பிளாட்டினம்/ டைமன்ட் / கோல்டு/ சில்வர்/ ஜெனரல் என விலைக்கு ஏற்றவாறு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் 5ஆயிரம் ரூபாய் ,10 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும் உள்ளே இடம் இல்லை என்று கூறப்பட்டதால் கோபமடைந்த ரசிகர்கள் மனஉளைச்சலில் புலம்பியபடியே திரும்பிச் சென்றனர்.
இசைநிகழ்ச்சியை ஒருங்கிணைக்க சரியான ஆட்கள் இல்லாததால் விஐபிகள், விலை உயர்ந்த இருக்கை பகுதிகளுக்கு திரளானோர் ஏறி குதித்து இடம்பிடித்துக் கொண்டாதாக சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிக்காட்டி வரும் ரசிகர்கள், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இதற்கு உரிய விளக்கத்தை அளித்தே தீர வேண்டும் என தங்களின் ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளனர்.
இதுவரை இப்படி ஒரு இசைக்கச்சேரியை பார்த்ததில்லை என்றும் "மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரியை மறக்கவே மாட்டோம்" என விரக்தியுடன் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.
Comments