தீ வைத்துக் கொல்லப்பட்ட மூதாட்டிகள்.. நகைகளுக்காக நடந்த பயங்கரம்..!
கேரளாவில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த இரு சகோதரிகளை நகைகளுக்காக தீ வைத்து கொலை செய்துவிட்டு காப்பாற்ற வந்ததாக நாடகமாடிய நபர் கைது செய்யப்பட்டான்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சோரனூர் நீலமலைக்குன்னு பகுதியில், எழுபது வயதைக் கடந்த சகோதரிகள் பத்மினி, தங்கம் ஆகியோர் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே காம்பவுண்டில் இரு வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்தனர். சனிக்கிழமை மதியம் பத்மினி தங்கியிருந்த வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. வீட்டுக்குள் இருந்து புகையும் வந்ததைக் கவனித்த அக்கம் பக்கத்தினர், உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு பத்மினியும் தங்கமும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.
அப்போது அந்த வீட்டுக்குள் இருந்து கழுத்து, முகம் ஆகியவற்றில் தீக்காயங்களுடன் ஒருவர் தப்பியோட முயன்றுள்ளார். வீட்டுக்குள் தீப்பிடித்தததை பார்த்து மூதாட்டிகளை காப்பாற்ற வந்ததாக அவர் கூறியதை நம்பாத அக்கம்பக்கத்தினர், அவரைப் பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். விசாரணையில் அவர் பட்டாம்பி பகுதியை சேர்ந்த பெயிண்ட்டர் மணிகண்டன் என்பது தெரியவந்தது. போலீசாரிடமும் அதே காரணத்தை மணிகண்டன் கூறவே, அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மணிகண்டனின் உடலில் காயமடைந்த இடங்களை ஆய்வு செய்த மருத்துவர்கள், உள்ளாடைக்குள் தங்க நெக்லஸ், வளையல்கள் இருந்ததைக் கண்டு போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்த நகைகளுக்காக மூதாட்டிகள் இருவரையும் எரித்துக்கொன்ற அதிர்ச்சி தகவலை மணிகண்டன் தெரிவித்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரிகளின் வீட்டில் மணிகண்டன் பெயிண்டிங் வேலை பார்த்திருக்கிறான். சகோரிகள் இருவரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட அவன், கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறான். மூதாட்டி பத்மினியின் வீட்டுக்கு வந்த மணிகண்டன், நகைகளை கொள்ளையடிக்க முயன்றிருக்கிறான். அதனைப் பார்த்து பத்மினி சத்தம் போடவே, பக்கத்து வீட்டிலிருந்த தங்கம் ஓடி வந்திருக்கிறார். இருவரையும் கட்டையால் சரமாரியாகத் தாக்கிய மணிகண்டன், அவர்கள் நிலைகுலைந்து விழுந்ததும், சமையல் எரிவாயுவை திறந்துவிட்டு தீ வைத்துள்ளான். இதில் அவனுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
Comments