டெல்லியில் நடைபெற்ற 2 நாள் ஜி 20 உச்சி மாநாடு நிறைவு.. 2024-ம் ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரேசில் அதிபரிடம் பிரதமர் மோடி ஒப்படைப்பு...!
டெல்லியில் நடைபெற்ற 2 நாள் ஜி 20 உச்சி மாநாடு நிறைவு பெற்றது. 2024-ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரேசில் அதிபரிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. ஜி20 உறுப்பு நாடுகள், 9 விருந்தினர் நாடுகள், 14 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் தவைர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை வலியுறுத்தும் வகையில் வசுதைவ குடும்பகம் என்ற கருப்பொருளில், இரு அமர்வு கூட்டங்கள் நடைபெற்றன. முதல்நாள் கூட்டம் முடிந்து இரவு உலக தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்தளித்தார்.
டெல்லியில் இன்று காலை சாரல் மழை பெய்துகொண்டிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல், மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உலக தலைவர்கள்
ராஜ்காட் வருகை தந்தனர். அவர்களை கதர் சால்வை அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார்.
மகாத்மா காந்திக்குப் பிடித்த பஜனை பாடல்களின் பின்னணியில் உலக தலைவர்கள் ஒன்றுகூடி நின்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன், மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
ராஜ்காட்டிலிருந்து பிரகதி மைதானம் சென்ற தலைவர்கள் 2-ம் நாள் ஜி20 மாநாட்ல் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, பிரதமர் மோடிக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். பின்னர் 2024-ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
மாநாட்டில் முடிவுரை ஆற்றிய பிரதமர், வரும் நவம்பர் மாதம் வரை ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பதை சுட்டிக்காட்டினார். ஒட்டு மொத்த உலக வளர்ச்சிக்காக இந்த 2 நாள் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளை மதிப்பாய்வு செய்ய, வரும் நவம்பர் இறுதியில் காணொளி மூலம் ஜி20 கூட்டம் நடைபெறும் என்று பிரதமர் மோடி கூறினார்.
Comments