தாலி கட்டுற நேரத்தில் கெட்டிமேளத்திற்கு பதில் இந்த சத்தம் கேட்குது..! எல்லாம் நல்ல சகுணம் தான்..!

0 10792

கடலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவரை 2 வருடமாக காதலிப்பதாகக் கூறி ஊர் சுற்றி விட்டு, காதலை முறித்துக் கொண்டு கழற்றிவிட்ட இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் போக்சோ வழக்கிற்கு பயந்து காதலியின் கழுத்தில் காதலன் தாலி கட்டிய சம்பவம் அரங்கேறியது.

தாலி கட்டும் நேரத்தில் கெட்டி மேளம் தானே ஒலிக்கும்... இங்க என்ன மணி சத்தம் எல்லாம் கேட்குதுன்னு நினைக்கிறீங்களா... இது அவசர திருமணம் அப்படித்தான் இருக்கும்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் புதுநகரைச் சேர்ந்த தென்னரசு 27 வயதான இவர் பண்ருட்டியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதி சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அசினா என்பவரை இரண்டு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகூறி புதுச்சேரிக்கு அழைத்துச்சென்று ஊர் சுற்றிய தென்னரசு ஆசை தீர்ந்ததும் திருமணம் செய்ய மறுத்து மாணவியை கழற்றிவிட்டதாக கூறப்படுகின்றது.

காதலன் தென்னரசு திசை மாறுவதை அறிந்த மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் துணையுடன் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பிருந்தே , தென்னரசு ஊர் சுற்றியது தெரியவந்ததால் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் தென்னரசு, காதலி அசினாவை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். திருமணத்துக்கு பெண் வீட்டார் கால அவகாசம் கொடுக்க மறுத்த நிலையில், தாலி வாங்கி வரவாவது அவகாசம் தருமாறு கேட்டனர். இதையடுத்து வெள்ளைக்கயிறு ஒன்றை வாங்கி அதில் மஞ்சளை தடவிய பெண் வீட்டார், அந்த மஞ்சள் கயிற்றில் மஞ்சளைக் கட்டி தாலியை உருவாக்கினர்.

இதையடுத்து உடனடியாக காவல் நிலையம் எதிரே உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று மாலை மாற்றியும், மஞ்சள் தாலி கட்டியும் அசினாவை, தென்னரசு வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார். குருக்கள் கொடுத்த பூக்களை மணமக்கள் மீது தூவி ஆசீர்வாதம் செய்தபோது அருகில் இருந்தவர் கொடுத்த ஐடியாபடி, கெட்டி மேளத்துக்கு பதில் , கோவிலில் சாமிக்கு பூஜையாகும் போது ஒலிக்கப்படும் மின்சார மணி மேளதாளத்தை ஒலிக்கவிட்டனர்.

திருமணம் ஆனதும்... அவர்கள் காதில் மேளத்துடன் ஒலித்த மணி யோசை அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை உணர்த்துவதாக இருந்தது.

பெண்ணின் உறவினர்கள் மற்றும் போலீசார் இனிப்புகள் வழங்கி மணமகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments