" பிரதமர் மோடி முன்பு "பாரத்" என்ற பெயர்ப்பலகை.. " இந்தியா ஒளிர்வதை கண்டு உலகமே வியப்பதாக பிரதமர் பேச்சு.. பல்வேறு சுவாரஸ்யங்களுடன் G20 மாநாடு துவக்கம்..
டெல்லியில் ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாளில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளை கடல் மற்றும் ரயில் மார்க்கமாக இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க போக்குவரத்துத் தடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் அடங்கிய சர்வதேச உயிரி எரிபொருள் கூட்டணியும் துவக்கப்பட்டுள்ளது.
20 உறுப்பு நாடுகள், 9 விருந்தினர் நாடுகள் மற்றும் 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்புடன் ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாள் கூட்டம் நடைபெற்றது. உச்சிமாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்திற்கு காலையிலேயே வந்து முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவராக உச்சிமாநாடு நடைபெறும் பாரத மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுக்கு ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் கோயில் சக்கரத்தின் புகைப்பட பின்னணியில் நின்று பிரதமர் மோடி தனித்தனியாக வரவேற்பு அளித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கோனார்க் சக்கரத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் விளக்கிக் கூறினார்.
மாநாடு அரங்கத்தில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் வைக்கப்பட்டுள்ள நாட்டின் பெயர் பலகையில் பாரத் என எழுதப்பட்டிருந்தது.
மாநாடு தொடங்குவதற்கு முன், மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கதில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். பின்னர் மாநாட்டு துவக்க உரையாற்றிய பிரதமர், ஜி20 நாடுகளின் கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் இணைவதற்கான அறிக்கையை வாசித்தார். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் அசலி அஸௌமானியை கட்டியணைத்து வாழ்த்தி நிரந்தர உறுப்பினர் இருக்கையில் அமரச் செய்தார் பிரதமர் மோடி.
பின்னர், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன் பிரதமர் மோடி தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர், பொருளாதாரம், வர்த்தகம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் அடங்கிய சர்வதேச உயிரி எரிபொருள் கூட்டணியை அந்நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பஸ்ஸர் அடித்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாசு இல்லாத மின் உற்பத்தி முறை, பாதுகாப்பான மின் உற்பத்தி உள்ளிட்ட நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த கூட்டணி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சிமாநாட்டிற்கு இடையே, இந்தியா, மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளை கடல் மற்றும் ரயில் மார்க்கமாக இணைக்கும் போக்குவரத்து தடத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன. இந்த திட்டத்தின் வாயிலாக இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஐரோப்பிய நாடுகள் இடையேயான பொருளாதார உறவு மேலும் வலுப்பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாரத மண்டபத்தில் இரவு விருந்து அளித்தார். இதற்காக பாரத மண்டபத்துக்கு வந்த சர்வதேச தலைவர்களுக்கு பீகாரில் உள்ள ஐந்தாம் நூற்றாண்டின் நாளந்தா பல்கலைக்கழகப் புகைப்படத்தின் பின்னணியில் குடியரசுத் தலைவரும் பிரதமரும் இணைந்து வரவேற்பளித்தனர்.
இரவு விருந்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளுடன் பாரத மண்டபம் பிரகாசித்தது.
மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 170 பேர் இரவு விருந்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
Comments