மில்லி போகவும் வேணாம்.. கில்லி வரவும் வேணாம்... லியோ பாடலுக்கு விழுந்த வெட்டு..!
லியோ படத்தின் 'நா ரெடி' பாடலை மட்டும் முதலில் சென்சாருக்கு அனுப்பிய நிலையில் , மது மற்றும் புகையிலைப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவது போல எழுதப்பட்டிருந்த பாடல்வரிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் நடிப்பில் லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடலான நா ரெடி தான் வரவா.. பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டு ஒரு கோடியே 23 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
இந்த பாடலை மட்டும் முதன் முதலாக தணிக்கைக்கு அனுப்பி வைத்தார் தயாரிப்பாளர் லலித்குமார். 4 நிமிடம் 17 வினாடிகள் ஓடக்கூடிய இந்த பாடலில் மது மற்றும் புகையிலைப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவது போல எழுதப்பட்டிருந்த பாடல்வரிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது தணிக்கை குழு. அதன்படி ‘பத்தாது பாட்டிலு நா குடிக்க.. அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க’...,என்ற பாடல் வரிகள் படத்தில் இடம் பெறாது.
அதே போல ‘ பத்த வச்சி புகையை விட்டா பவர் கிக்கு... என்ற வரியும் புகையில.. புகையில... பவர் கிக்கு... என்ற வரிகளும் வெட்டித் தூக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ‘மில்லி உள்ள போனா போதும்.. கில்லி வெளியே வருவாண்டா’...என்று ரசிகர்களை கொண்டாட வைத்த வரிகளுக்கும் வெட்டு விழுந்துள்ளது.
மேலும் விஜய் புகைபிடித்தபடி வரும் அனைத்து காட்சிகளிலும் வழக்கத்தை விட பெரிய எழுத்துக்களில், மது மற்றும் 'புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு' என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஒத்த பாட்டுக்கே இத்தனை வெட்டுன்னா, லியோ படம் முழுவதும் சென்சாருக்கு சென்று திரும்பினால் மொத்தம் எத்தனை வெட்டுக்கள் என்பது தெரியவரும் என்கின்றனர் படக்குழுவினர்.
Comments