சுண்டட்டி அருவியை தேடிச்சென்று விபரீதம் கட்டித்தூக்கி வந்தனர்..! ஊட்டிக்கு போறீங்களா உஷார்..!
முறையான பாதை வசதி இல்லாத சுண்டட்டி அருவிக்கு கூகுள் மேப் பார்த்து நண்பர்களுடன் குளிக்கச்சென்ற இளைஞர் தடாகத்தில் மூழ்கிபலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் தவிர்க்க வேண்டிய சுற்றுலா இடம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
சுண்டட்டி நீர்வீழ்ச்சியை வீடியோ எடுத்து .... யூடியூப்பர்களால் குடும்பங்கள் குளிக்க பாதுகாப்பான பகுதி என்று சுட்டிக்காட்டப்பட்ட இந்த தடாகத்தில் மூழ்கித் தான் இளைஞர் பலியான விபரீதம் நிகழ்ந்துள்ளது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் வழியில் முறையான பாதை வசதி இல்லாத சுண்டட்டி நீர்வீழ்ச்சி உள்ளது.
இங்கு கோவை கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆல்வின் ஜோன்ஸ் , தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர், தன்னுடன் படிக்கின்ற சக மாணவர்களுடன் வார விடுமுறையை கொண்டாட சனிக்கிழமை நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இந்த பகுதி முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ள நிலையில், அதனை மீறி கரடுமுரடான வழுக்கு பாறைகளை கடந்து அவர்கள் நீர்வீழ்ச்சியை அடைந்துள்ளனர்
அந்த அருவியில் பாதுகாப்பாக குளிக்க ஏற்ற இடம் என்று யூடியூப்பர்களால் சுட்டிக்காட்டப்பட்ட தடாகத்தில் மாணவர் ஆல்வின் ஜோன்ஸ் குதித்து குளித்தார். தண்ணீரில் குதித்த வேகத்தில் ஆல்வின் ஜோன்ஸ் நீச்சல் தெரியாததால் பாறை இடுக்கில் கால் சிக்கிக் கொண்டதால் நீரினுள் மூழ்கியுள்ளார். உடனே அருகில் இருந்த சக நண்பர்கள் காப்பாற்றக்கோரி கூச்சலிட்டுள்ளனர். அக்கம்பக்கத்தில் எவரும் இல்லாத்தால் , இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு எவரும் எளிதில் வர இயலவில்லை. அதற்குள் அவர் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகின்றது.
பின்னர் மாணவர்கள் ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்த பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர், மற்றும் காவல்துறையினர் நீரில் மூழ்கிய ஆல்வின் ஜோன்ஸை தடாகத்தில் இறங்கித் தேடினர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தேடிய நிலையில் தண்ணீருக்கு அடியில் கல்லுக்குள் சிக்கிய ஆல்வின் ஜோன்ஸ் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் மாணவரின் உடல் மீட்கப்பட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து சோலூர்மட்டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அருவி தடை செய்யப்பட்ட பகுதி என்றும் , இதற்கு செல்ல முறையான பாதை வசதிகள் கிடையாது என்று சுட்டிக்காட்டும் வனத்துறையினர் சிலர் புதிய இடங்களை தேடிச்சென்று பார்க்கும் ஆவலில் இது போன்ற இடங்களுக்கு சென்று விபரீத முடிவை தேடிக் கொள்வதாகவும், ஊட்டிக்கு சுற்றுலாவரும் பயணிகள் சுண்டட்டி அருவிக்கு செல்வதை தவிர்க்கவும் கேட்டுகொண்டுள்ளனர்.
Comments