சீலை அகற்றி விட்டு தண்ணீர் திருட்டு...! 4 வழிச்சாலையிலேயே நடக்குது இது...!!
கடும் வறட்சி நிலவும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு அரசு வைத்த சீலை அகற்றி விட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சரணாலய விலங்குகள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டு மலையில் அமைந்துள்ளது வெளிமான்கள் சரணாலயம். இந்த சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், கடமான் ஆகிய மான்களும், முள்ளம்பன்றி, எறும்பு தின்னி, உடும்பு, மலைப்பாம்பு, குள்ளநரி, முயல், மரநாய் மற்றும் 86 வகையான பறவையினங்களும் வாழ்ந்து வருகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மலையின் அடிவாரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கடந்த காலங்களில் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ராட்சத அளவிலான ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என சமூக ஆர்வலர் ஒருவர் 2016ம் ஆண்டில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், வல்லநாடு மலையடி வாரத்தில் ஆய்வு செய்த அப்போதைய மாவட்ட ஆட்சியர், அங்கு இயங்கி வந்த 4 ஆழ்துளை கிணறுகளை கண்டுபிடித்து அவற்றுக்கு உடனடியாக சீல் வைத்து தண்ணீர் எடுக்க தடை விதித்தார்.
இந்த நிலையில் 4 ஆழ்துளை கிணறுகளிலும் சீல்களை அகற்றியதோடு, மேலும் சில ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு தூத்துக்குடி பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக கூறும் பொதுமக்கள், இதே நிலை நீடித்தால் சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Comments