காருடன் எரிக்கப்பட்ட செல்வந்தர்..! காட்டில் கிடைத்த செல்போனால் கொலையில் துப்பு துலக்கிய போலீசார்
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் காட்டுப்பகுதியில் காருடன் தொழில் அதிபர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காட்டில் கிடைத்த செல்போன் மூலம் துப்புதுலங்கிய போலீசார், 4 பேரை கைது செய்துள்ளனர். கடனை திருப்பிக்கேட்டவருக்கு நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார்-பல்லாக்குளம் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதியில் கார் ஒன்று தீ பிடித்து எரிந்த நிலையில் கிடந்தது. காரின் டிக்கியில் கருகிய நிலையில் ஒருவரின் உடல் கிடந்தது. விசாரணையில், இறந்து கிடந்தவர் சாயல்குடியை சேர்ந்த தொழிலதிபர் நாகஜோதி என்பது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் கிடந்த செல்போனை வைத்து மைக்கேல்ராஜ் என்பவரை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
நாகஜோதி வெளியூர் செல்லும் நேரங்களில் தனது காருக்கு டிரைவராக மைக்கேல்ராஜ் என்பவரை அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வங்கியில் அடமானம் வைத்த தனது நகைகள் ஏலத்துக்கு வர இருப்பதாக கூறி அதை மீட்க 2 லட்சம் தந்து உதவும் படி நாகஜோதியிடம் மைக்கேல்ராஜ் கேட்டுள்ளார். நாகஜோதியும் அவருக்கு பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்ட போது, நாகஜோதியை கொலை செய்ய மைக்கேல்ராஜ் திட்டம் தீட்டியுள்ளார்.
இந்த நிலையில், நாகஜோதியை தொடர்பு கொண்ட மைக்கேல்ராஜ், விளாத்திகுளத்தில் ஒருவர் தனக்கு 2 லட்சம் தருவதாக கூறி உள்ளதகவும், அதனை வாங்கி உங்கள் கடனை அடைத்து விடுகிறேன் என்று கூறி உள்ளார். அதனை நம்பிய நாகஜோதி காலை 8 மணியளவில் சாயல்குடியில் இருந்து காரில் புறப்பட்டார். காரை மைக்கேல்ராஜ் ஓட்டினார். சாயல்குடியை கடந்து சிறிது தூரம் வந்தபோது, வழியில் காத்திருந்த, மாரி, கணபதிராஜன், கனி ஆகியோரை மைக்கேல்ராஜ் காரில் ஏற்றிக் கொண்டார். கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு ஆட்கள் தேவைப்படுவதால் இவர்களை அழைத்துச்செல்வதாக கூறி மைக்கேல்ராஜ் சமாளித்தார். சூரங்குடி அருகே வந்த போது, அவர்கள் 4 பேரும் சேர்ந்து நாகஜோதியின் கழுத்தை கயிறுபோட்டு நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
பின்னர் காருடன் உடலை எரித்து விட முடிவு செய்தனர். ஒரு சரக்கு ஆட்டோவில் சென்று விறகு, பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு வைப்பார்-பல்லாகுளம் சாலைக்கு வந்தனர். அங்குள்ள காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி, அதற்குள் விறகுகளை போட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். பின்னர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது மைக்கேல்ராஜின் சட்டைப்பையில் இருந்து செல்போன் தவறி விழுந்துள்ளது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட அந்த செல்போன் மூலம் எளிதாக துப்புதுலக்கி கொலையாளிகளை மடக்கி பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments