நோய், காட்டுப்பன்றியால் பாதித்த கரும்புப் பயிருக்கு நிவாரணம் வழங்குக : இ.பி.எஸ்.
மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழகத்தில் கரும்பு சாகுபடியில் முன்னணியில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல சர்க்கரை ஆலைகள் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளதால், கரும்பு பயிரிட்டு பெரும் நஷ்டத்திற்குள்ளான பல விவசாயிகள், நெல், மக்காச் சோளம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மாறி வருவதாக அவர் கூறியுள்ளார்.
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு, விவசாய உற்பத்தியில் புரட்சி செய்ததாக மார்தட்டும் வேளாண் அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூரில் இந்த ஆண்டு 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிப்பட்ட நிலையில், நோய்கள் தாக்கியும், காட்டுப் பன்றிகளின் தொல்லையாலும், சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிர்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருகிலுள்ள மற்ற நிலங்களிலும் நோய் பரவக்கூடாது என்ற நோக்கில் கரும்பு பயிர்களை விவசாயிகளே டிராக்டரில் உழுது அழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பளவில் கரும்பு பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments