மெட்ரோ ரயில் பணியின் போது ராட்சத துளையிடும் இயந்திரம் இடித்து வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை தீவிரமாக நடந்து வருகிறது. போரூரில் பில்லர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலை நடுவில் சில இடங்களில் பில்லர் அமைப்பதற்காக துளை போடும் பணியும் நடந்து வருகிறது.
அந்த வகையில் சென்னை போருர் ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் பணியின் போது அதிகாலை மெட்ரோ ரயில் பணியாளரின் கவன குறைவால் சாலையில் துளையிட பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரம், அஞ்சுகம் நகரில் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது மோதியது.
இதில் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
வீட்டில் இருந்த பீரோ, கட்டில் போன்ற உடமைகள் சேதமடைந்தன. இந்த இயந்திரத்தின் அதிர்வால் இந்த பகுதியில் பூகம்பம் தான் வந்து விட்டது என்று நினைத்து அருகே இருந்த குடியிருப்பு வாசிகளும் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மெட்ரோ ரயில் பணிக்காக துளையிட பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரம் சுமார் 100 டன் எடையில் 200 அடிக்கு மேல் உயரம் கொண்டது.
சாய்வாக இருக்கும் இந்த இயந்திரத்தை பயன்படுத்த செங்குத்தாக நிலை நிறுத்த வேண்டும் அப்படி நிலை நிறுத்தும் போது பின்னால் இருந்த வீட்டை கவனிக்காமல் ஆபரேட்டர் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments