ஜோதிடர்களிடம் மோதல்.. எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து மரணத்தின் திகில் பின்னணி..!

0 6482

ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் மூலம் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக தனது 56 ஆவது வயதில் காலமானார். எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது சீரியசான நிலையில் தானாக கார் ஓட்டிச்சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தவருக்கு நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்து வைரமுத்து உதவியாளர்.... புத்தகம் விற்கும் பையன்.. ஓட்டல் தொழிலாளி... சினிமா உதவி இயக்குனர் , இயக்குனர், குணச்சித்திர நடிகர், சீரியல் நடிகர் என தொடர் உழைப்பு... எதிர் நீச்சல் தொலைக்காட்சி தொடர் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகர் ஜி மாரிமுத்து..!

தேனி மாவட்டம், வருச நாடு அடுத்த பசுமலைத்தேரி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மாரிமுத்து, பொறியியல் கல்லூரிப்படிப்பை சிவகாசியில் முடித்தவர், சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்தவர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தார்.

1994 ஆம் ஆண்டு அரண்மனைக்கிளி படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகம் ஆன ஜி.மாரிமுத்து. தொடர்ந்து ஆசை, நேருக்கு நேர், வாலி, மன்மதன் என ஏராளமான படங்களிலும், இயக்குனர்கள் மணிரத்னம், வஸந்த், எஸ்.ஜே சூர்யா, சீமான் உள்ளிடோருடன் பணிபுரிந்தார்.

கண்ணும் கண்ணும் ,புலிவால் என இரு படங்களை இயக்கினாலும் , எதிர் நீச்சல் தொலைக்காட்சி தொடரில் ஆதிகுண சேகரன் கதாப்பாத்திரம் மூலம் சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மீம் கிரியேட்டர்களால் பிரபலமானார்

கொம்பன், மருது, பரியேறும் பெருமாள் அண்மையில் வெளியான ஜெயிலர் , தற்போது படப்பிடிப்பில் உள்ள இந்தியன் 2 வரை ஏராளமான படங்களிலும் நடித்துள்ள மாரிமுத்து பொது வெளியில் தன்னை கடவுள் மறுப்புக் கொள்கையாளராக காட்டிக் கொண்டவர். அண்மையில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடர்களை கடுமையாக விமர்சித்தார்

தனக்கு சரி என்ற பட்டதை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல பேசுவதிலும், தான் சொன்ன கருத்தில் உறுதியாக இருப்பதிலும் மாரிமுத்து கொள்கை பிடிப்புள்ளவர்

இந்த நிலையில் எதிர் நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது ஏசி அறையில் அவருக்கு வியர்த்து கொட்டியதாக கூறப்படுகின்றது. தனது உடல் நிலை அசாதாரணமாக இருப்பதாக உணர்ந்த அவர், உடல் நலம் பாதிப்புக்குள்ளான நிலையிலும் அவரே காரை ஓட்டிக்கொண்டு வட பழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நிலையில் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எப்போதும் இறுக்கமாக காணப்பட்டாலும், எளிதில் உணார்ச்சி வசப்படும்குணம் கொண்ட மாரிமுத்து ஒரே நேரத்தில் சின்னத் திரையிலும், வெள்ளித்திரையிலும் பிஸியாக இருந்த நேரத்தில் உயிரிழந்தது திரை உலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments