இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்
வெள்ளித் திரை மற்றும் சின்னத் திரையில் பிரபல நடிகரான மாரிமுத்து சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒலிப்பதிவு கூடம் ஒன்றில் இன்று காலை சின்னத் திரை தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரே காரை ஓட்டிக் கொண்டு சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனதாக தெரிகிறது. அங்கு மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து காலமானார்.
இயக்குநர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக திரைப்பயணத்தை துவங்கிய மாரிமுத்து, வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோருடமும் உதவி இயக்குநராக பணியாற்றினார். பாடலாசிரியர் வைரமுத்துவிடம் உதவியாளராகவும் இருந்த மாரிமுத்து, சிம்புவின் மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். பின்னர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் என்ற படத்தையும் விமல், பிரசன்னா நடித்த புலி வால் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
உதவி இயக்குநராக இருந்த போது வாலி திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமான மாரிமுத்துவை சேரன் நடித்த யுத்தம் செய் படத்தில் முழு கதாபாத்திரம் ஒன்றில் நடிகராக அறிமுகப்படுத்தினார், இயக்குநர் மிஷ்கின். அதைத் தொடர்ந்து, மருது, கொம்பன், கடைக்குட்டி சிங்கம், சண்டைக்கோழி டூ, பரியேறும் பெருமாள், டாக்டர், விஜயுடன் பைரவா, ரஜினியுடன் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்றார்.
சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வந்த மாரிமுத்து, இந்தா மா.. ஏய் என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களிலும் மீம்களிலும் பிரபலமானார்.
கமல்ஹாசனின் இந்தியன் டூ, சூர்யாவின் கங்குவா போன்ற படங்களில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென காலமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக திரைத்துரையினர் தெரிவித்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரிமுத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திரைத்துரையினர் மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகர்கள் ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தேனி மாவட்டம் பசுமலை கிராமம் மாரிமுத்துவின் சொந்த ஊராகும். நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியபின் மாரிமுத்துவின் உடல் பசுமலைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments