ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் ஊழியர்களை ஏமாற்றி ரூ.1.36 கோடி ரூபாயை பறித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் கைது
ஆந்திராவில், ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்களை ஏமாற்றி ஒரு கோடியே 36 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
விஜயநகரத்தில் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச் சென்ற பணத்துடன் ஊழியர்கள் 4 பேர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீஸார் அந்த 4 பேரையும் தேடிக் கண்டுபிடித்தனர்.
அப்போது, தங்களுக்கு அறிமுகமான 5 பேர் இரண்டு கோடி மதிப்பிற்கு 2ஆயிரம் ரூபாய் தாள்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதனை பெற்றுக் கொண்டு ஒருகோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் எனவும் சொன்னதாக கூறிய தனியார் நிறுவன ஊழியர்கள், அதை நம்பி ஏ.டி.எம்களில் நிரப்ப வைத்திருந்த பணத்தை அவர்கள் சொன்ன இடத்திற்கு எடுத்து சென்ற போது தங்களைத் தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
அதன்பேரில், பணத்துடன் தப்பிய 5 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 80 லட்சம் ரூபாய் பணம், ஒரு தங்க சங்கிலி, மூன்று மொபைல் போன்கள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
Comments