இனியாவது விழிக்குமா டோல்கேட் நிர்வாகங்கள்.? விதிமீறலால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவது தடுக்கப்படுமா?

0 3062

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலையோரம் விதிகளை மீறி நிறுத்தி, 6 பேரின் உயிரை பறித்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். டோல்கேட் அமைத்து வசூல் வேட்டை நடத்தும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரும், ரோந்து போலீசாரும், தங்கள் கடமையை செய்ய தவறுவதால், உயிர்பலி வாங்கும் விபத்துகள் நேரிடுவதாக, குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் விபத்தில் சிசிடிவி காட்சிகள் தான் இவை.... 

சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் ஈரோடு மாவட்டம் ஈங்கூரைச் சேர்ந்த பழனிச்சாமி மகள் பிரியாவுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் பிரியாவின் உறவினர்கள் சிலர் கொண்டலாம்பட்டி சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், உடன்பாடு ஏற்படாததால் பிரியாவை அழைத்துக் கொண்டு அதிகாலை நேரத்தில் மாருதி ஆம்னி வேனில் புறப்பட்டனர். சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே சின்னாக்கவுண்டனூர் சென்ற போது, அதிகாலை 2.30 மணியளவில், சாலை ஓரமாக நின்றுக் கொண்டிருந்த லாரி மீது பக்கவாட்டில் மோதியதில் ஆம்னி வேன் நொறுங்கியது. அதில் குழந்தை சஞ்சனா அவரது தாத்தா பழனிச்சாமி, பாட்டி பாப்பாத்தி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த சங்ககிரி போலீஸார், படுகாயமடைந்த பிரியா மற்றும் ஓட்டுநர் இருக்கை வலதுபுறம் என்பதால் தப்பித்த ஆம்னி வேன் ஓட்டுநர் விக்னேஷை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்ததோடு, சடலங்களை மீட்டு சங்ககிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெகன்பாபுவை கோவையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கோவைக்கு சேனைக்கிழங்கு ஏற்றி வந்ததாகவும், தூக்கம் வந்ததால், தேசிய நெடுஞ்சாலையிலேயே லாரியை எச்சரிக்கை விளக்கை ஆன் செய்யாமல், நிறுத்திவிட்டு தூங்கிய போது விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். விபத்தில் ஏராளமானவர் இறந்ததால் பயந்து கொண்டு லாரியை ஓட்டிச் சென்றதாகவும் ஜெகன் பாபு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விபத்துக்கு தான் ஒரு காரணமாக இருந்தும், விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை காப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், உடனடியாக லாரியை எடுத்துக் கொண்டு சென்றால் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணி அந்த ஓட்டுநர் தப்பிச் சென்றது, சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.

சுங்க கட்டணம் வசூலிப்பதில் ஆர்வம் காட்டும், சுங்கச்சாவடி நிர்வாகத்தினரோ, அல்லது ரோந்து போலீசாரோ, சாலையோரம் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி தங்கள் கடமையை செய்வதில்லை. அலட்சியத்தோடு நடந்து கொள்ளும் ரோந்து போலீசார் மீதும், தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் ஒப்பந்ததாரர்கள் மீதும், வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர். மேலும், இரவு நேரத்தில் பயணிப்பவர்களில், ஓட்டுநோடு சேர்ந்து, ஒருவராவது விழித்திருப்பது அவசியம்.

இதற்கிடையே, விபத்து நேரிட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இனி விபத்தை ஏற்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைகளில் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார்.

ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தாலும், ரோந்து சென்று கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீதும், டோல்கேட் ஒப்பந்ததாரர்கள் மீதும் விபத்திற்கு காரணம் என வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காதவரை, இதுபோன்ற கோர விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்வதோடு, எச்சரிக்கையும் பயனளிக்கப்போவதில்லை...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments