ரூ.12க்கு வாங்கி ரூ.60க்கு விற்கிறார்கள்! விவசாயியை நோகடிக்கும் விலை நிர்ணயம்

0 27952

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சுமார் ஆறு ஏக்கரில் ஒட்டு தக்காளி மற்றும் ஒட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, விவசாயத்தை விட்டு கூலி வேலைக்குச் சென்றுவிடலாமா என யோசித்து வருவதாகக் கூறுகிறார். 

பொன்னேரியை அடுத்த தடம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள விவசாய முறைகளை கற்று வந்து தனது நிலத்தில் பயிரிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இஸ்ரேல் சென்று வந்த அவர், அங்கு பயிரிடுவதுபோல், தக்காளியையும் கத்திரிக்காயையும் புதிய தொழில்நுட்பத்துடன் பயிரிட்டுள்ளார்.

சுமார் 6 ஏக்கரில் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருக்கிறது சீனிவாசனின் காய்கறித் தோட்டம். இஸ்ரேல் விவசாய முறைப்படி சுண்டைக்காய் தண்டில் கத்தரிக்காயையும் கத்தரிக்காய் தண்டில் தக்காளியையும் ஒட்டுரகமாக சாகுபடி செய்துள்ளார்.

சாதாரண நாற்றுகள் 6 மாதங்கள் வரை மட்டுமே விளைச்சல் கொடுக்கும் நிலையில், இதுபோன்ற ஒட்டுரகம் 3 முதல் 4 ஆண்டுகள் வரை விளைச்சல் கொடுக்கும் என்கிறார் சீனிவாசன்.

தக்காளியும் கத்தரிக்காயும் நல்ல விளைச்சல் கொடுத்தாலும் உரிய விலை கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கிறார் சீனிவாசன்.

ஒட்டு ரக கத்தரிக்காய் ஒரு நாற்று 8 ரூபாய் என்கிற ரீதியில் வாங்கி வந்து பயிரிட்டு, அதனை பராமரிப்பதற்காக வாரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகக் கூறும் சீனிவாசன், ஒட்டுமொத்தமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவானதாகக் கூறுகிறார்.

ஆனால் கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய் 12 ரூபாய் என்றே கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறுகிறார். தன்னிடமிருந்து கிலோ 10 ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கிலோ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர் என்றும் சீனுவாசன் கூறுகிறார்.

ஆசை ஆசையாய் பயிர் சாகுபடி செய்ததாகக் கூறும் சீனிவாசன், உரிய விலை கிடைக்காத விரக்தியில் கூலி வேலைக்கே சென்றுவிடலாம் போல இருப்பதாகக் கூறுகிறார். விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments