இல்லம் தேடி கண்ணன் வந்தான்.. !!
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்தும், பகவான் கிருஷ்ணருக்கு உகந்த பிரசாதங்களைப் படையலிட்டும் மகிழ்கின்றனர்.
அதர்மம் வீழ்ந்து தர்மம் தழைக்க வேண்டி கண்ணன் அவதரித்தநாள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி என பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவு நேரத்தில் கண்ணன் அவதரித்ததாகக் கூறப்படுகிறது. இரவில் பிறந்ததால் கருமை நிறத்தில் பிறந்ததாகவும் கூறப்படுவதுண்டு..
தேவகியின் வயிற்றில் குழந்தையாக சிறையில் பிறந்து தயிரும் வெண்ணையும் திருடித் தின்று குறும்புகள் புரியும் பாலகனாக யசோதையிடம் வளர்ந்தான் கண்ணன்.
வளர்ந்த பருவத்தில் ராதையைக் காதலித்து காதலின் மகத்துவத்தை தனது ராசலீலைகள் மூலம் உணர்த்தியவன் கண்ணன்..
குதூகலமும் துள்ளலும் நிறைந்தது கண்ணனின் திருஅவதாரம். மீராவும் ஆண்டாளும் கண்ணனுக்காக உருகியவர்கள். இதனால் காதல் தெய்வமாக கண்ணன் காட்சியளிக்கிறான்.
குழந்தையாகவும் காதலனாகவும் கீதை உரைத்த கண்ணன் பகவத் கீதையை உரைத்தபோது ஞானியாகக் காட்சியளித்தான். உலகின் மந்திரம் அனைத்தையும் இயக்கும் மாயவிரலோன் தானே என்று உரைக்கிறான் கண்ணன்.
யசோதையின் மடியில் சந்தான கோபாலனாகவும், தவழும் கோலத்தில் பாலகிருஷ்ணராகவும், நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணராகவும், சுண்டுவிரலால் மலையைத் தூக்கும் கோவர்த்தனதாரியாகவும், ராதையுடன் குழலூதும் ராதாகிருஷ்ணராகவும், ருக்மணி சத்யபாமா சமேதராக முரளீதரனாகவும், அஷ்டபுஜங்களுடன் மதனகோபாலனாகவும், கீதோபதேசம் செய்யும் பார்த்தசாரதியாகவும் எட்டுவிதமாகக் காட்சி அளிக்கிறார் கிருஷ்ணன்..
இத்திருநாளில் கண்ணனை வழங்கினால் கவலைகள் தீரும்- மகிழ்ச்சி பிறக்கும், வாழ்க்கையை வழிநடத்தும் சாரதியாக அவன் துணை என்றும் இருக்கும் என்பதே இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை..
Comments