தண்ணியடிச்சா தட்டிக் கேட்பியா?" ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை!

0 4417

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டுக்கு அருகில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட பா.ஜ.க பிரமுகர், அவரது தாய் உள்ளிட்ட 4 பேர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பா.ஜ.க பிரமுகர் மோகன்ராஜ். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் இவரது வீட்டையொட்டிய தென்னந்தோப்பில் கோழிக்கடை வெங்கடேசன் என்பவர் உள்ளிட்ட 3 பேர் மது அருந்தியுள்ளனர். இதனை கண்ட மோகன்ராஜ், சத்தம் போட்டு அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டதாக கூறப்படுகின்றது. மோகன்ராஜ் தனது வீட்டிற்கு வந்த பின்னர் இரவு 7:35 மணிக்கு பல்சர் பைக்கில் அங்கு வந்த வெங்கடேஷ் உள்ளிட்ட போதை ஆசாமிகள் 3 பேரும் ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளனர்.

வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த மோகன்ராஜ், அவர்களின் பைக்சாவியை எடுத்துக் கொண்டு விரட்டி உள்ளார். மேலும் அவர்களை அடித்து விரட்ட குச்சி ஒன்றை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற போது கணவரின் ஆவேசத்தை கண்டு அஞ்சிய அவரது மனைவி கணவர் வெளியே வராதபடி கதவை பூட்டி உள்ளார்.

தொடர்ந்து போதை ஆசாமிகள் அங்கிருந்து செல்லாமல் வம்பு செய்தபடி நின்றதால், கதவை திறந்து விட்டுள்ளார். மோகன்ராஜூம் அவரது தாய் புஷ்பாவதியும், சித்தி ரத்தினம் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த செந்தில்குமார் ஆகியோரும் சேர்ந்து அந்த குடி போதை ஆசாமிகளை சிறிது தூரம் விரட்டிச்சென்று உள்ளனர். அவர்கள் இருட்டுக்குள் ஓடி மறைந்துள்ளனர்.

இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்த போது இருட்டுக்குள் இருந்து வீச்சரிவாளுடன் பாய்ந்த கோழிக்கடை வெங்கடேசன் உள்ளிட்ட 3 போதை வெறியர்களும் மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக வெட்டி உள்ளனர்

இதில் புஷ்பாவதி இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செந்தில்குமார் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையிலும், கொல்லப்பட்டனர். தன்னை குடிக்க கூடாது என்று சொன்ன மோகன்ராஜை வாயில் சரமாரியாக வெட்டிக்கொன்ற கொடூரர்கள், ரத்தினம்மாளையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியதாக மோகன்ராஜ் மனைவி அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையாளியான கோழிக்கடை வெங்கடேசன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதும் அவன் மீது முக்கூடல், சுத்தமல்லி காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

வெங்கடேசன் ஏற்கனவே கோழிக்கடை வைத்திருந்த போது அவரிடம் கோழிக்கறி வாங்கிக் கொண்டு மோகன்ராஜ் பணம் பாக்கி வைத்திருந்ததாகவும், இதற்காக மோகன்ராஜின் ஓட்டல் கடையில் இருந்து சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை வெங்கடேசன் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது முதலே இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் செந்தில்குமாரிடம் ஓட்டுநர் வேலைக்கு சேர்ந்த வெங்கடேசன், 2 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக சம்பவத்தன்று மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து, தேனியை சேர்ந்த சோனமுத்தையா ஆகிய இருவரையும் அழைத்து வந்து மோகன்ராஜ் தோப்பில் அமர்ந்து மது அருந்தி, வம்பிழுத்து இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

செல்லமுத்துவைப் பிடித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் கோழிக்கடை வெங்கடேசன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

அங்கு பதற்றத்தை தணிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் மது அருந்தும் குடிவெறியர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments