இரு மாணவர்களுக்கு கத்திகுத்து..! பிட் அடிக்காதே என்றதால் ஆத்திரம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே தேர்வில் காப்பியடித்ததை ஆசிரியரிடம் காட்டிக் கொடுத்த ஆத்திரத்தில் இரு மாணவர்களை, சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண்ணில் உள்ள புனித ஜோசப் மேல் நிலைப் பள்ளியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்ற போது நயினார்புரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் துண்டுச்சீட்டில் உள்ள விடைகளைப் பார்த்து தேர்வு எழுதியதாகவும், இதனை பார்த்த நிஷாந்த், அமிர்தராஜ் ஆகிய இரு மாணவர்களும், 'பார்த்து எழுதாதே , ஆசிரியரிடம் காட்டிக் கொடுத்து விடுவோம்' என்று சொன்னதாகவும் கூறப்படுகின்றது.
இதையடுத்து தேர்வு முடிந்து பள்ளிக்கு வெளியே வந்தபோது தான் தேர்வில் காப்பி அடித்ததை காட்டிக் கொடுப்பதாகக் கூறிய இரு மாணவர்களையும், காப்பி அடித்த மாணவர் கூர்மையான கம்பியால் குத்தியதாகவும், இதில் இருவருக்கும் விலாவில் குத்து விழுந்ததகவும் கூறப்படுகின்றது. காயம் அடைந்த இரு மாணவர்களையும் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காயங்களில் தையல் போடப்பட்டதும் இருவரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவனை கைது செய்த போலீசார், அந்த மாணவர் கூர்மையான ஆயுதத்துடன் பள்ளிக்குள் எப்படிவந்தார் ? என்பது குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவர்களிடம் போதைப் பழக்கம் குறித்தும், சாதி மோதல்களை தடுக்கும் வகையிலும் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments