100 மீட்டரை கடந்து பயணிக்கும் பிரக்யான்.. சந்திரனில் மாஸ் காட்டும் சந்திரயான்..!
நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரத்தை கடந்து தொடர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென் துருவத்தின் சூழல் அதில் உள்ள தனிமங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் ரோவர், தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில், நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி பாயிண்ட்டில் இருந்து ரோவர் எப்படி பயணம் செய்து வருகிறது என்ற விளக்க வரைபடத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
தென் துருவத்தில் முதலில் மேற்கு திசையில் பயணித்த ரோவர் பிறகு வடக்கு நோக்கி செல்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, விக்ரம் மற்றும் பிரக்யானை உறக்க நிலைக்கு அனுப்பும் பணி ஓரிரு நாளில் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
உறைய வைக்கும் குளிர் நிலவும் நிலவின் இரவு நேரத்தை தாக்குப் பிடிக்கும் வகையில் அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
Comments