காவிரி தண்ணீரை நம்பி கண்ணீர் விடும் விவசாயிகள்.. இழப்பீட்டுக்காக காத்திருப்பு..!

0 1552

நாகப்பட்டினம் மாவட்டம் ஆதமங்கலம் கிராமத்தில் காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட குருவை பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டதாக விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி தண்ணீர் கடைமடைக்கு வரும் என்று நம்பி குறுவை பயிரிட்ட பெண் விவசாயி ஒருவர் தலையில் கைவைத்துக் கொண்டு கண்ணீர் விடும் சோக காட்சிகள் தான் இவை..!

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட போதிலும் கடைமடைப்பகுதியான நாகப்பட்டின மாவட்டம் ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர் , ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி, உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீர் சரிவர சென்று சேரவில்லை என்று கூறப்படுகின்றது. முதல் அமைச்சர் வருகையின் போது பாசனவாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட்ட அதிகாரிகள் அதன் பின்னர் தண்ணீரை நிறுத்திவிட்டதால் தாங்கள் பயிரிட்ட குறுவை சாகுபடி பயிர்கள் கருகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவழித்து பயிர் செய்ததாகவும், அந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில்லாமல் தற்போது கருகிபோய் விட்டதாகவும், அரசு தகுந்த இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்

இதுவரை அமைச்சர்களோ, அதிகாரிகளோ குறுவை பயிர் சாகுபடி கருகி வீணாகி இருப்பதை கண்டுகொள்ளவில்லை என்றும் கால்வாய் ஓரம் இருக்கும் ஒரு சில விளை நிலங்களை மட்டும் பார்யையிட்ட அதிகாரிகள் பசுமையாக இருப்பதாக கூறிச்சென்றுவிட்டதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர்

திருத்துறைப்பூண்டி பகுதிக்குட்பட்ட கிராமங்களிலும் பல இடங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வராமல் குறுவை பயிர்கள் கருகிவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்

கர்நாடக அரசிடம் இருந்து காவிரி தண்ணீர் பெற்று தருவதோடு, கடைமடை பகுதியை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக பாசன கால்வாய் மற்றும் வாய்கால்கள் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments