கோவை சிலிண்டர் வெடிப்பு சத்தியமங்கலம் காட்டில் கூடிய ஐ.எஸ். பயங்கரவாத கோஷ்டி..! புழல் சிறையில் முக்கிய குற்றவாளி
கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கில் ஐ.எஸ். பயங்கரவாதி அசாருதீனை திருச்சூர் சிறையில் இருந்து கைது செய்துள்ள என்.ஐ.ஏ , அவரை காவலில் எடுத்து விசாரிக்க வசதியாக புழல் சிறையில் அடைத்தனர். ஈஸ்டரை தொடர்ந்து கோவையில் நாச வேலைக்கு சத்தியமங்கலம் காட்டில் கூடிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
கோவையில் நடந்த கார் சிலிண்டர் குண்டு வெடிப்பில் நாச வேலைக்கு திட்டமிட்ட ஜமேஷா முபின் என்பவர் பலியான நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள் , நாசவேலைக்கு சதி செய்த 13 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் குண்டு வெடிப்பிற்கு முன்பாக ஜமேஷாமுபின் கூட்டாளி பெரோஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 3 பேர் ,கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த வையூர் சிறைக்கு சென்று , அங்கு அடைக்கப்பட்டுள்ள ஐ.ஏஸ். பயங்கரவாதியான அசாரூதீனை சந்தித்து வந்தது தெரியவந்தது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்ற அசாரூதின், கேரள போலீசில் சிக்குவதற்கு முன்னதாக இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி என்று சுட்டிக்காட்டிய என்.ஐ.ஏ அதிகாரிகள், அசாரூதீனை குருவாக ஏற்று பயான் வகுப்புகளுக்கு ஜமேஷா முபின் கூட்டாளிகளுடன் சென்று வந்ததாகவும், சத்தியமங்கலம் காட்டில் ஒன்று கூடி , இலங்கை போலவே கேரளா மற்றும் தமிழகத்திலும், நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியதாக தெரிவித்தனர் . இதற்கிடையே அசாரூதீன் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு வையூர் சிறையில் அடைக்கப்பட்டதால். அந்த சிறையை தகர்த்து அசாரூதீனை மீட்கவும் இந்த குழு திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அசாரூதினை , கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், 11 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments