திருவண்ணாமலை கல்குவாரியால் விவசாயம் பாதிக்கப்படும்... அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் சாலைமறியல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளண்டரம் கிராமத்தில் கல்குவாரி செயல்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
2019-ல், முள்ளண்டரம் கிராமத்தில் கல்குவாரி அமைக்கும் குத்தகையை வேலூரைச் சேர்ந்த சரணவன் என்பவர் எடுத்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, அப்போது குவாரியில் கல் உடைக்கும் பணி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சரவணன் மீண்டும் குவாரியில் கல் உடைக்கும் பணியைத் தொடங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கிராம மக்கள், குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
குவாரியால் விவசாயப் பணி பாதிக்கப்படும் என்றும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கவலை தெரிவிக்கும் அவர்கள், முள்ளண்டரம் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குவாரியில் கல் உடைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
Comments