நிலவைத் தொட்டு விட்டு சூரியனை நோக்கிச் செல்லும் இஸ்ரோ...!!! வசமாகுமா சூரியனின் இயக்க கோட்பாடு

0 1509

சந்திரயான் மூலம் நிலவை வெற்றிகரமாக ஆராய்ந்து வரும் இந்தியாவின் அடுத்த சாதனைப் பயணமாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 திட்டத்தை செயல்படுத்துகிறது இஸ்ரோ. ஆதித்யா திட்டம் என்றால் என்ன ? அதன் செயல்பாடுகள் என்ன ? என்பது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு .

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி ஆய்வு செய்து வருகிறது. அடுத்தக் கட்டமாக சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் வைத்திருக்கும் ஆதித்யா எல் 1 என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது இஸ்ரோ.

சென்னை அருகிலுள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி57 ராக்கெட் மூலம் நாளை ஏவப்படும் ஆதித்யா எல்1 விண்கலம், ஆயிரத்து 475 கிலோ எடை கொண்டதாகும்.

ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சூரியனை நோக்கி பயணித்து லக்ராஞ்ஜ் பாயிண்ட் என அழைக்கப்படும் எல் 1 பகுதிக்கு சென்று அங்கு இருந்தவாறு சூரியனை ஆராய்வதுதான் ஆதித்யா திட்டம்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், ஏன் இந்த எல் 1 பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த பாயிண்டில் தான் சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் என்பதை பிரெஞ்ச் கணிதவியலாளர் லக்ராஞ்ஜ் என்பவர் கண்டறிந்தார். இந்த புள்ளியில் விண்கலத்தை நிலை நிறுத்தும் போது குறைந்த அளவே எரிபொருளை பயன்படுத்தி நீண்ட நாட்களுக்கு ஆய்வு செய்ய முடியும் என கூறப்படுகிறது.

திட்டமிட்டபடி ஆதித்யா விண்கலத்தின் பயணம் துவங்கினால் குறிப்பிடப்பட்ட அந்த எல்-1 பாயிண்ட்டை நெருங்கவே 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. அங்கு,
எல்-1ஐ பகுதியில் ஹேலோ எனப்படும் சுற்றுவட்டப்பாதையை மைய புள்ளியாகக் கொண்டு ஆதித்யா நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தவாறே எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சூரியனை ஆதித்யா நேரடியாக ஆராயும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்

விண்கலம் நிலைநிறுத்தப்பட்ட பிறகு சூரியனின் போட்டோஸ்பியர், குரோமேஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிபுற அடுக்கான கொரோனா ஆகிய பகுதிகளை இந்த விண்கலம் ஆராய்ச்சி செய்ய உள்ளது.

இதற்காக ஆதித்யா விண்கலத்தில் SUIT, SoLEXS, ASPEX போன்ற 7 விதமான கருவிகள் உள்ளன. இந்த கருவிகள் சூரியனின் இயக்கவியல், வெப்பமாக்கல் மற்றும் அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் வெளியேற்றங்களின் துவக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்ய இருக்கிறது.

இப்படி செய்யப்படும் ஆய்வுகள் மூலம் சூரியனில் நடக்கும் அணு கரு இணைவு பற்றி இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும் எனவும், அதனால் பூமியில் உள்ள அணு உலைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர் விஞ்ஞானிகள்.

சூரிய புயல்கள் பற்றியும் அதனால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மிகத் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும் எனவும், பூமியின் காலநிலைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் சூரியனின் மேற்பகுதியான கொரொனா பற்றி அறிவதன் மூலம் பூமியில் ஏற்படும் காலநிலை மாறுபாடுகளை எளிதில் கணிக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

திட்டமிட்டபடி ஆதித்யா விண்கலம் தனது இலக்கை அடைந்து விட்டால் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் சீனாவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெறும். தற்போது அனுப்பி வைக்கப்படவுள்ள ஆதித்யா விண்கலம் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரையில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments