உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது காவிரி வழக்கு.. தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை வினாடிக்கு 7200 கன அடி வீதம் 8.9 டிஎம்சி தண்ணீர் திறக்க கோரியிருந்த நிலையில், 5000 கனஅடி நீர் திறக்க மட்டுமே கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் தன்னிச்சையாக உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறி கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது.
இதனிடையே, டெல்லியில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு வேதனை அளிக்கும் விதத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் மீது மதிப்பு இருந்தாலும் கர்நாடகாவில் போதிய மழையின்றி விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று தெரிவித்தார்.
Comments