அணுக்கழிவு நீரில் வளர்ந்த மீன்கள் ஆபத்தானது இல்லை என்பதை உணர்த்த மீன் உணவைச் சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்
ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வெளியேறிய நீரில் வளர்ந்த மீன் உணவை, அது ஆபத்தானது இல்லை என்பதை உணர்த்த அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் சாப்பிட்டனர்.
சில நாட்களுக்கு முன்ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த அணுக்கழிவு நீர் பசிபிக் பெருங்கடலில் திறந்துவிடப்பட்டது.
டன் கணக்கில் அணுக்கழிவு நீர் கடலில் வெளியேற்றப்பட்டதற்கு சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த நிலையில், அணுக்கழிவு நீர் வெளியேறிய கடல் பகுதியில் இருந்து பிடிக்கப்பட்ட மீன், ஆக்டோபஸ் உள்ளிட்டவற்றை வைத்து தயாரிக்கப்பட்ட உணவை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் மூன்று கேபினட் அமைச்சர்கள் மதிய உணவு கூட்டத்தின்போது சாப்பிட்டனர்.
அணுக்கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே கடலில் திறந்துவிடப்பட்டதாகவும், அதனால் அப்பகுதியில் வாழும் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதையும் உணர்த்தவே இந்த உணவை அவர்கள் சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்டை நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அடுத்த சில ஆண்டுகளுக்கு ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கழிவு நீர் தொடர்ந்து திறந்துவிடப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.
Comments