ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடக்கம்
சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் 24 மணி நேர கவுன்ட்டவுன் நாளை காலை 11.50 மணிக்கு தொடங்குகிறது.
சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்வெளித் திட்டத்தின் கீழ் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகையும், விண்கலனை ஏந்தி செல்லவுள்ள ராக்கெட்டின் உட்புறச் சோதனைகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரிய-பூமி அமைப்பின் L1 எனப்படும் லெக்ரேஞ்சியன் புள்ளியை சுற்றி ஒளிவட்டப் பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கிரகணம் உள்ளிட்ட நேரங்களிலும் சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து பூமிக்கு தகவல்களை அனுப்பும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. ஆதித்யா-எல்1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments