சூடாக சோறு... சுத்தமில்லா அறைகள்...ஆள் இல்லா அரசு மாணவர் விடுதி.. ஆய்வறிக்கையில் சமாளித்த அமைச்சர்..! கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்

0 2161

காலை டிபனாக லெமன் ரைஸ் வித் சட்டினி... மதியம் சாப்பாடாக சூடாக சோறு வித் சாம்பார், ரசம் , கூட்டு எல்லாம் கன ஜோராக தயார் செய்து வைக்கப்பட்டிருந்தாலும் அதை சாப்பிட ஒரு மாணவர் கூட இல்லாத அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் விடுதி இது தான்..!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே உள்ள மேல்மணம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் ஆதிதிராவிட நல மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்

சமையல் அறையில் சூடாக சோறு, லெமன் ரைஸ் , குழம்பு, ரசம் போன்றவை அண்டா அண்டாவாக தாயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. அதனை ருசித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்

சமையல் பொருட்கள் வைத்திருக்கும் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு இரு தினங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மட்டும் பெயருக்கு வாங்கி வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்

ஒரு அறையில் மாணவர்கள் தங்கி இருப்பது போல சட்டைகள் காயப்போடப்பட்டிருந்தன. அங்கிருந்த அலமாரிகளில் இரு டிரங்க் பெட்டிகள் மட்டுமே இருந்தன, அவற்றைத் திறந்து பார்த்த போது காலியாக இருந்தன

மாணவர்கள் மற்ற அறைகளில் இருப்பது போன்று சமாளித்து அடுத்த அறைக்கு அழைத்துச்சென்றனர், அங்கும் மாணவர்கள் எவரும் இல்லை

குளியலறை மற்றும் கழிவறைகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்தது போல் காட்சி அளித்தன,

மாணவர்களைத் தேடி நூலக அறைக்குள் சென்றார் அமைச்சர், அங்கு மாணவர்களும் இல்லை.. அவர்கள் படிக்க ஒரு புத்தகம் கூட வாங்கி வைக்கவில்லை என்பது தெரியவந்தது. அங்கிருந்த மின் விசிறியும் செயல்படவில்லை.

ஒவ்வொரு அறையாக மாணவர்களை தேடிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாணவர்கள் எங்கே என்று கேட்ட போது அவர்கள் வீட்டுக்கு சென்றுள்ளதாக விடுதிக்காப்பாளர் சமாளித்தார். வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்த போது 66 மாணவர்கள் தினமும் தங்கி இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு சமைக்கப்படுவதாகவும் உண்மைக்கு மாறான தகவலை கூறி ரிஜிஸ்டரை பராமரித்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து திருதிருவென விழித்த மாவட்ட அதிகாரி, 100க்கும் மேற்பட்டவர்கள் விடுதியில் சேர விண்ணப்பித்திருப்பதாக கூறினார். ஆனால் ஒருவர் கூட விடுதியில் இல்லாதது ஏன் ? என்பதை அறியும் பொருட்டு விண்ணப்பித்த மாணவரின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொள்ள அமைச்சர் உத்தரவிட்டார். மாணவனின் தாயோ, தங்கள் மகன் தனியார் பள்ளியில் படிப்பதாகவும், பள்ளிக்கு அருகில் தங்கள் வீடு இருப்பதால் விடுதிக்கு வரவில்லை என்றார். அப்புறம் ஏன் விடுதியில் சேர்த்தீர்கள் ? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

மற்றொரு மாணவரின் தாயோ, விடுதியில் இருந்து பேசுவதாக கூறியதும் இணைப்பை துண்டித்தார். 66 பேர் தங்கி இருப்பதாகக் கூறப்பட்ட வருகை பதிவேடு போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும், ஆய்வுக்கு வரும் அமைச்சரை ஏமாற்ற சமையல் மாஸ்டர்கள் மூலம் அண்டாவில் உணவு சமைத்து வைத்ததும் அம்பலமானது

இவற்றை பார்த்த மாவட்ட ஆட்சியர், விடுதிக் காப்பாளர் அர்ஜூனரின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய்ப் போனதைக் கண்டு தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

விடுதியில் இருந்த ஆய்வறிக்கையில், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ஆகியோருடன் ஆய்வு செய்யப்பட்டது எனவும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும், புதிதாக சேர்த்த மாணவர்கள் விடுதியில் தங்குவதில்லை என்பதால் பெற்றோரிடம் பேசி மாணவர்கள் தங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டது எனவும், உணவு சரியாக இருந்தது எனவும், விடுதிக்காப்பாளரின் தில்லுமுல்லுவை சமாளிக்கும் வகையில் எழுதிவைத்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

ஆனால் இதனை விடாத செய்தியாளர்களோ, மாணவர்களே இல்லாததை மறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளையும் ஆய்வு செய்து, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பித்து அரசு நிதியில் முறைகேடு செய்யும் அரசு விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments