போதைப்பொருள் - ஆயுதக்கடத்தல்.. சிக்கிய முன்னாள் உதவியாளர்.. நடிகை வரலட்சுமி சொல்வது என்ன ? என்.ஐ.ஏ விசாரணையில் திடுக் தகவல்

0 4069

நடிகை வரலட்சுமியிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு உதவியாளராக இருந்த நபர் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் அரசுக்கு உதவ தயாராக இருப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்

கடந்த 2021 ஆம் ஆண்டு விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 327 கிலோ ஹெராயின் மற்றும் ஐந்து ஏகே 47 ஆயுதங்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இலங்கை படகில் இருந்து பறிமுதல் செய்து ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் சர்வதேச போதை பொருள் மற்றும் தீவிரவாத கும்பலுக்கு தொடர்பிருப்பது அம்பலமானதால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 13 நபர்களில் குணசேகரன் என்பவர் பாகிஸ்தானில் உள்ள ஹாஜி சலீம் என்ற போதைப் பொருள் கும்பல் தலைவனிடம் இருந்து போதை பொருட்களை பெற்று ஈரான் கடலில் இருந்து இந்தியா வழியாக இலங்கைக்கு கடத்துவதை இந்த கும்பல் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடமாக நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் 14 வது நபராக , லிங்கம் என்கிற ஆதிலிங்கத்தை சென்னை சேலையூரில் வைத்து கேரள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மூலமாக கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டு ஆதிலிங்கம் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற பெயரில் அரசியல் கட்சியை தமிழகத்தில் ஆரம்பித்து கடத்தலில் வரும் பணத்தை நிதி பரிமாற்றம் செய்ய பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

சினிமாவில் உள்ள பல்வேறு பைனான்சியர்களுக்கு படம் தயாரிப்பதற்கு பணத்தை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. முக்கியமாக மிகப்பெரிய பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் படங்களின் பெரிய செட்டுகள் போடப்படும் பொழுது தேவைப்படும் மிகப்பெரிய தொகை ஆதிலிங்கத்தின் மூலம் பைனான்சியர்களுக்கு வழங்கப்பட்டதையும் என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது

போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மூலம் கிடைக்கப்பட்ட பணத்தை சினிமா மற்றும் சில அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி நிதியாக வழங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கணக்கில் காட்டாமல் சினிமா பைனான்சியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு யார் யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார் என்பது குறித்த பட்டியலை தயாரித்து விரிவான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமியின் உதவியாளராக இருந்தது விசாரணையில் தெரியவந்ததால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தனக்கு சம்மன் ஏதும் அனுப்பபடவில்லை என்று மறுத்துள்ள வரலட்சுமி, தனது தாயாரிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் அப்போது மூன்று வருடங்களுக்கு முன்பே ஆதிலிங்கம் பிரீ லான்சர் முறையில் தங்களிடம் பணியாற்றி வேலையை விட்டு நின்றுவிட்டதாக தெரிவித்தார் , அரசுக்கு தேவைப்பட்டால் உதவ தாயாராக இருப்பதாக வரலட்சுமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்தவாரம் லிங்கத்தை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், அதில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments