நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் - இபிஎஸ்
நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகர்கோவிலில் குறுகிய சாலைகளும், தெருக்களும் உள்ள இடங்களில் பழைய கடைகள், வீடுகள் மற்றும் கட்டடங்கள் இயற்கைச் சீற்றங்களினால் இடிந்து விழும் சூழலில், அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி அனுமதி தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தொடர் கட்டட பகுதி மற்றும் திட்ட அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டது போன்ற பிரச்சனைகள் உள்ளதாகவும் அதனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்த அரசு, 4 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
அப்பிரச்சனைகளை சரிசெய்து, அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கும் பொருந்தும் படியாக அரசாணை வெளியிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Comments